மலேசிய சீன அசெம்பிளி மண்டபம் ( MCAH) வரும் நவம்பர் 19ஆம் தேதி அதன் 20ஆம் ஆண்டு நிறைவு விழாவையும் சீன எலிட் டிராகன் விருது வழங்கும் நிகழ்ச்சியையும் மிகப் பிரமாண்டமான முறையில் நடத்தவுள்ளது.
விருந்துபசரிப்புடன் கூடிய இந்த விருதளிப்பு விழாவில் மலேசியாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த, ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கிய சீன தனிநபர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது என்று MCAH தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் கே கே சாய் கூறினார்.
MCAH அமைப்புக்கு சீன சமுதாயம் வழங்கி வரும்வற்றாத ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விருந்துபசரிப்பு, விருதளிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன்வழி மலேசிய சீன சமுதாயத் தினரை ஊக்குவித்து இன்னும் பல சாதனைகளை நிகழ்த்துவதற்குத் தூண்டுவதற்காகவும் இந்த மாபெரும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்று டத்தோஸ்ரீ டாக்டர் கே கே சாய் கூறினார்.
தானங்கள், சமூக நல நடவடிக்கைகள் போன்றவற்றில் தனிநபர்களும் இயக்கங்களும் மனிதநேயத்துடன் ஈடுபடுவதற்கு MCAH தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது.
வறிய ஏழைகளின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கு இந்தச் சமூக நலத் திட்டங்கள் மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கும். அதே சமயம் ஏழை, பணக்காரர் என்ற ஏற்றத் தாழ்வுகளை நீக்கி சமத்துவமான ஒரு சமுதாயத்தை உருவாக்குவதையும் MCAH அதன் தலையாய இலக்காகக் கொண்டிருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தப் பிரமாண்ட நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவராகவும் இருக்கும் டத்தோஸ்ரீ டாக்டர் கே கே சாய் வரும் நவம்பர் 19ஆம் தேதி கோலாலம்பூர், புடு ஐசிசி மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறும் என்றும் சொன்னார்.




















