ஜோகூர் சுல்தானின் திறந்த இல்ல உபசரிப்பில் சுமார் 18,000 பேர் கலந்து கொண்டனர்

ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தர் இன்று ஜோகூர், இஸ்தானா பெசாரில் இன்று நடத்திய திறந்த இல்ல உபசரிப்பில் சுமார் 18,000 பேர் கலந்து கொண்டனர். இதில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டிலிருந்து வரும் பார்வையாளர்களும் இருந்தனர் என்பது சிறப்பிற்குரியது.

சரியாக இன்று காலை 9 மணிக்கு உள்ளே அனுமதிக்கப்படுவதற்கு முன், அரண்மனைக்கு வெளியே காலை 7 மணிக்கே மக்கள் காத்திருந்தனர்.

நீல நிற சட்டை அணிந்திருந்த சுல்தான் இப்ராஹிம் சரியாக காலை 10 மணிக்கு இஸ்தானா பெசார் வந்தடைந்தார்.

அங்கு ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காசி, ஜோகூர் மாநில அரசாங்கச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி மற்றும் ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமாருல் ஜமான் மாமட் ஆகியோருடன் மேன்மை தங்கிய சுல்தான் அனைத்து மக்களைச் சந்திக்க ஒரு மணி நேரத்திற்கும் மேலாகச் செலவிட்டார்.

கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு ஜோகூர் ஆட்சியாளரின் முதல் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு இதுவாகும்.

இந்த திறந்த இல்ல உபசரிப்பில் பல வகையான உணவுப்பண்டங்கள் மக்களுக்காக உபசரிக்கப்பட்டன, அதில் செண்டூல், கெத்துப்பாட், ரெண்டாங் மற்றும் நாசி பிரியாணி போன்ற உள்ளூர் உணவு வகைகளும் விருந்தில் சிறப்பிடத்தை பிடித்தன.

மேலும் திறந்த இல்லத்தில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு டியூட் ராயா மற்றும் குட்டி பைகளும் வழங்கப்பட்டது.

சுல்தான் இப்ராஹிம், பார்வையாளர்களை தனிப்பட்ட முறையில் வரவேற்று வாழ்த்தினார். ஜோகூர் ஆட்சியாளரைக் காண ஆவலுடன் காத்திருந்த கூட்டத்தினருடன் அவர் சிறிது நேரம் கைகுலுக்கினார்.

பெர்மைசூரி ஜோகூர் ராஜா சாரித் சோபியா பிந்தி அல்மர்ஹூம் சுல்தான் இட்ரிஸ் ஷாஹந்த் மற்றும் ஜோகூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here