இஸ்ரேலின் ஏவுகணைக்கு இரையான டாக்டர் மகாதீரால் கட்டப்பட்ட காஸா மருத்துவ நிலையம்

பெட்டாலிங் ஜெயா:

டந்த நவம்பர் 7ஆம் தேதி காஸாவில் நடத்தப்பட்ட இஸ்ரேலின் வெடிகுண்டு தாக்குதலில், முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட்டின் கீழ் செயல்பட்டுவரும் அமைப்பு ஒன்றினால் காஸாவில் நடத்தப்பட்டுவந்த மருத்துவ நிலையம் தகர்க்கப்பட்டது.

இதனால் மிகுந்த வருத்தமடைந்துள்ளதாக 98 வயதான டாக்டர் மகாதீர், தமது சோகத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.

“தங்களது வீடுகள் மீது குண்டு வீசப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவ நிலையத்தில் அடைக்கலம் நாடி வந்த ஐந்து காஸா குடும்பங்கள், இஸ்ரேலியத் தாக்குதலில் அவர்களின் நான்கு உறுப்பினர்களை இழந்தனர்,” என்று நேற்று டாக்டர் மகாதீர் பதிவிட்டார்.

டாக்டர் மகாதீரின் கீழ் இயங்கும் பெர்டானா அனைத்துலக அமைதி அறநிறுவனம் தொடக்கத்தில் இருந்தே அந்த மருத்துவ நிலையத்தின் கட்டுமானத்தில் ஈடுபட்டு வந்ததால், அந்நிலையத்துடன் தனக்கு தனிப்பட்ட தொடர்பு இருப்பதாக டாக்டர் மகாதீர் கூறினார்.

2019 முதல் செயல்பட்டு வந்த அந்நிலையம், கடந்த ஆண்டு ஜூலையில் அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைக்கப்பட்டது. டாக்டர் மகாதீரின் மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மா முகம்மது அலி, அந்நிலையத்தின் ஆலோசகராக உள்ளார்.

மருத்துவமனைகளையும் குடியிருப்புகளையும் குண்டுவீசி தாக்கி வந்த இஸ்ரேலியப் படையினர், தமது மருத்துவ நிலையத்தையும் விட்டுவைக்கவில்லை என்று குறிப்பிட்ட டாக்டர் மகாதீர், இஸ்ரேல் இந்த நிலையங்களை வேண்டுமென்றே தாக்குவதாக குற்றஞ்சாட்டினார்.

“இது, ராணுவங்களுக்கு இடையேயான போரன்று. பாலஸ்தீன மக்கள்தொகையில் காஸாவைத் துடைத்தொழிக்க இஸ்ரேல் செய்யும் இனப்படுகொலை.

“இஸ்ரேலின் அட்டூழியத்தால் பாலஸ்தீனர்கள் பாதிக்கப்படாமலிருக்க போராடி, பிரார்த்திப்பதை மட்டுமே நம்மால் செய்ய முடியும்,” என்றார் டாக்டர் மகாதீர்.

இஸ்ரேலின் நட்பு நாடுகளான அமெரிக்காவும் பிரிட்டனும் இஸ்ரேலின் ‘காட்டுமிராண்டித்தனத்தை’ தொடர்ந்து நியாயப்படுத்தி அதை ஆதரிப்பதாக டாக்டர் மகாதீர் குறைகூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here