சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதா, வேண்டாமா? மஇகா விரைவில் முடிவு – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

ஆறு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மஇகா போட்டியிடுமா, இல்லையா என்பது குறித்து கூடியவிரைவில் அறிவிப்புச் செய்யவிருப்பதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ச.விக்னேஸ்வரன் கூறினார்.

நேற்று மஇகா தலைமையகத்தில் அக்கட்சியின் மத்திய செயலவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தேசியத் தலைவருடன் கட்சித் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன், உதவித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். செயலவைக் கூட்டத்திற்குப் பிறகு விக்னேஸ்வரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். குறிப்பாக சட்டமன்றத் தேர்தல் குறித்த கேள்விகளும் எழுப்பப்பட்டன.

அதற்குச் சுருக்கமாகப் பதிலளித்த விக்னேஸ்வரன், இந்த மத்திய செயலவைக் கூட்டத்தில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதே சமயம் கூடியவிரைவில் நடத்தப்படும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இருப்பினும் அது சார்ந்த அறிவிப்புகளை இப்போது தெரிவிக்க முடியாது. மாறாக கூடியவிரைவில் அந்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என அவர் கூறிச் சென்றார்.

இம்முறை சட்டமன்றத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி – தேசிய முன்னணி ஓரணியில் களம் இறங்குகின்றன. எனவே அவ்விரு தரப்புக்கும் இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நீடித்து வருகின்றது.

அதே சமயம் தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்தும் இன்னமும் உறுதியான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இந்த சட்டமன்றத் தேர்தலில் மஇகா போட்டியிடாமலும் போகலாம். அதற்கான சாத்தியம் இருப்பதாகவும் கட்சி வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது. ஆனாலும் தேசிய முன்னணிக்குத் தமது ஆதரவைத் தொடர்ந்து வழங்க மஇகா தலைமைத்துவம் தம்முடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here