சட்டமன்றத் தேர்தல்களுக்கான தொகுதி ஒதுக்கீடு: தேசிய முன்னணி 45%, நம்பிக்கைக் கூட்டணி 55%

சுக்காய், ஜூலை 2-
மொத்தம் 6 மாநில சட்டமன்றங்களில் உள்ள 245 இடங்களுள் 45 விழுக்காட்டு இடங்களில் தேசிய முன்னணி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஞ்சிய தொகுதிகளில் நம்பிக்கைக் கூட்டணி போட்டியிடும் என்று தேசிய முன்னணித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி நேற்றுக் கூறினார்.

கடந்த பொதுத்தேர்தலில் பெறப்பட்ட வெற்றி அடிப்படையில் இந்தத் தொகுதிப் பங்கீடு அமைந்திருக்கிறது என்று அம்னோ தேசியத் தலைவருமான அவர் சொன்னார். அந்த அடிப்படையில் 45 விழுக்காட்டுத் தொகுதிகளில் தேசிய முன்னணியும் 55 விழுக்காட்டுத் தொகுதிகளில் நம்பிக்கைக் கூட்டணியும் போட்டியிடப் போவதாக நான் கருதுகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட கட்சிகள் வெற்றிபெற்ற தொகுதிகள் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு அமைந்திருக்கின்றது என்றும் துணைப்பிரதமருமான அவர் சொன்னார். பந்தாய் பெநுஞ்சோக், கிஜால், சுக்காயில் நேற்று நடைபெற்ற மக்கள் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களின்போது நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேசிய முன்னணி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். அடுத்த வாரம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் சேர்ந்து 6 மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு இறுதி ஙெ்ய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.

இதன்பிறகு தேசிய முன்னணிக்கும் நம்பிக்கைக் கூட்டணிக்கும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து முடிவுசெய்யப்படும் என்றார் அவர். தேர்தல்கள் நடைபெறப் போகும் கெடா சட்டமன்றத்தில் 36 இடங்களும் கிளாந்தானில் 45 இடங்களும் திரெங்கானுவில் 32 இடங்களும் பினாங்கில் 40 இடங்களும் சிலாங்கூரில் 56 இடங்களும் நெகிரி செம்பிலானில் 36 இடங்களும் உள்ளன.
இதற்கிடையே ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் அந்தந்த மாநிலக் கட்சியின் தொடர்புக்குழு குறைந்தபட்சம் 3 வேட்பாளர்களை முன்மொழிய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here