திமுகவின் ‘முத்தமிழ் முருகன்’ மாநாடு அறிவிப்பு: இந்து வாக்குகளை கவரும் ‘அரசியல் தந்திரமா’?

தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தமிழ்நாட்டில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படும் என, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவித்திருப்பது, பாஜகவிடமிருந்து எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. பாஜக மட்டுமல்லாமல், ‘முருகன் தமிழர்களின் இறைவன்’ என்ற முழக்கத்தைத் தொடர்ந்து முன்வைத்து வரும் நாம் தமிழர் கட்சியும் இதை விமர்சித்துள்ளது. இந்து வாக்குகளை கவர்வதற்காகன ’அரசியல் தந்திரம்’ என்று அக்கட்சிகள் தெரிவித்துள்ளன. என்ன சர்ச்சை?

அமைச்சர் சேகர்பாபு சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஜூன் அல்லது ஜூலையில் வெகுவிமரிசையாக நடைபெறும். உலகளவில் இருக்கும் முருக பக்தர்கள், முருக கோவில்களைப் பராமரிப்பவர்களை தமிழகத்திற்கு அழைத்து இரண்டு நாட்கள் மாநாடு நடத்தப்படும் எனத் தெரிவித்தார். இந்த மாநாட்டில் கண்காட்சிகள், கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே தமிழ்நாடு பாஜக இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. பாஜக பொதுச் செயலாளர் ஆர். சீனிவாசன், “முதலில் பாஜக மத்திய அரசின் திட்டங்களை தங்கள் திட்டங்களாக காட்டிக்கொண்டு ‘ஸ்டிக்கர்’ ஒட்டியது. முருகனை தமிழ்நாட்டுக்கு மட்டும் சுருக்கிவிட முடியாது. அவரை உலகம் முழுவதிலும் வழிபடுகின்றனர். இத்தகைய சூழ்ச்சிகளில் தமிழ்நாட்டு மக்கள் சிக்க மாட்டார்கள் எனத் தெரிவித்திருந்தார்.

இம்மாநாட்டை நடத்துவதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றும் ஆட்சி அமைத்ததில் இருந்தே முருகன் கோவில்களுக்காகப் பலவித திட்டங்களுக்கு நிதியுதவி செய்து வந்ததாகவும் சேகர்பாபு விளக்கம் அளித்தார். திருச்செந்தூர் முருகன் கோவிலைப் புணரமைக்க தமிழக அரசு ரூ.300 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என்றும் அவர் கூறினார். இதையொட்டித்தான் தற்போது சர்ச்சை எழுந்திருக்கிறது.

சீமான்

‘முப்பாட்டன் முருகன்’, ‘குறிஞ்சி தந்த தலைவன்’, ‘இன மூதாதை’ என முருகன் ‘தமிழ்க்கடவுள்’, ‘தமிழர்களுக்கான கடவுள்’ என்ற வாதத்தை தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறது நாம் தமிழர் கட்சி. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் அக்கட்சி சார்பாகக் கொண்டாடப்படுகிறது. முருகன் ‘இந்து கடவுள் அல்ல, தமிழர் கடவுள்’ என்பது அக்கட்சியின் வாதம்.

இம்மாநாடு தொடர்பாக அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பிபிசி தமிழிடம் பேசுகையில், “திராவிடத்தை விடுத்து, தமிழர்களின் கடவுளைக் கொண்டாடினால்தான் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியும் என்ற புரிதல் திமுகவுக்கு இப்போதுதான் வந்திருக்கிறது.

நாங்கள் முருகனைக் கொண்டாடியதற்கு எங்களை பாஜக ‘பி டீம்’ என்றனர். இந்துத்துவத்திற்கும் வேலுக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்? ஆனால், எங்களை நோக்கி ஆர்.எஸ்.எஸ்-இன் இன்னொரு அமைப்பு என்றனர். இப்போது இவர்கள் பாஜகவின் ‘ஏ’ டீமா?” என்றார். தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஜூன் அல்லது ஜூலை மாதம் நடக்கவிருக்கும் மாநாடு குறித்து இப்போதே திமுக அறிவித்திருப்பது, தேர்தல் லாபத்திற்காகத்தான் என்றார் அவர். இது அக்கட்சியின் அரசியல் உத்தி எனச் சொல்வதைவிட தந்திரம் என்றுதான் சொல்ல வேண்டும் எனக் கூறுகிறார் காளியம்மாள்.

‘பாஜகவுக்கு பயம்’

இந்த விமர்சனங்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “அறநிலையத்துறை வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் தான் இவை. இந்து சமய விதிகளுக்கு உட்பட்டு கோவில் நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்தான். அதில் என்ன தவறு இருக்கிறது?” என்று கேள்வியெழுப்புகிறார். மேலும், “நாங்கள் முருகன் குறித்துப் பேசினால் பாஜகவுக்கு ஏன் கோபம் வருகிறது? அவர்கள் இதை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என நினைத்திருக்கிறார்கள் போல. அதனால் பயப்படுகிறார்கள் என நினைக்கிறேன். திமுகவின் கொள்கைகளைத் தெரிந்துகொள்ளாமல் பாஜக பேசுகிறது. இதற்கும் இந்துத்துவத்திற்கும் சம்பந்தமில்லை. எல்லா மதங்களுக்கும் அமைப்பு இருக்கிறது,” என்றார். முஸ்லிம்கள் நலன்களுக்கென வக்பு வாரியம் இருப்பதையும் ஆர்.எஸ். பாரதி சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here