மித்ரா நிதி: சல்லிக்காசைக்கூட இனி சுருட்ட முடியாது – டத்தோ ரமணன் திட்டவட்டம்

கோலாலம்பூர், ஜூலை 5-

மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவின் (மித்ரா) நிதியில் இருந்து  சல்லிக்காசைக்கூட இனி யாரும் தவறாகப் பயன்படுத்த முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை என்று அதன் சிறப்புப் பணிக்குழுத் தலைவர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மித்ரா மானியத்திற்காகவும் நிதிக்காகவும் மனுச் செய்வோரின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் ஒவ்வொரு கூட்டத்திலும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) உயர்நெறிப் பிரிவு அதிகாரிகள் உடன் இருப்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

ஒப்புதல் அளிக்கப்பட்டு அந்த நிதி பட்டுவாடா செய்யப்படுவதற்கு முன்னதாக விண்ணப்பங்கள் மிக விரிவாக ஆய்வு செய்யப்படுகின்றன என்று நியூ ஸ்டிரெய்ட்ஸ் டைம்ஸ் ஆங்கில நாளிதழுக்கு வழங்கிய ஒரு சிறப்பு நேர்காணலில் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

மித்ராவில் இருந்து மானியம் மேலும் நிதியைப் பெறும் நிறுவனங்கள், தனிநபர்கள் ஆகியோரின் பெயர்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மித்ரா வலைத்தளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. அனைத்தும் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

மித்ரா நிதி தொடர்பில் கடந்த காலங்களில் படிந்திருக்கும் கறைகளைச் suத்தப்படுத்துவதற்கு மித்ராவிடம் இருந்து நிதி பெறும் அனைவரின் முழு விவரங்கள் மித்ரா வலைத்தளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு காசுக்கும் கணக்குக் காட்டப்படுகிறது. சுருட்டலுக்குச் சாத்தியமே இல்லை என்று அவர் மிக உறுதியாகக் கூறினார். 

அரசு சாரா இயக்கங்கள் வழி நிதிக்கு விண்ணப்பம் செய்யப்பட்டாலும் முழுமையாக ஆய்வு செய்த பின்னரே அந்த நிதி வழங்கப்படுகிறது. அதன் பின்னர் அந்த நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது எனவும் டத்தோ ரமணன் சொன்னார்.

மித்ரா நிதியைப் பயன்படுத்தி தாங்கள் மேற்கொள்ளும் திட்டங்கள் மேலும் நடவடிக்கைகள் குறித்த ஆகக்கடைசியான நிலவரங்களை அரசு சாரா இயக்கங்கள் தொடர்ந்து தகவல் அளிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். 

2019ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டு வரை மித்ரா நிதியில் இருந்து 203 மில்லியன் ரிங்கிட் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற புகார்கள் மீதான புலன் விசாரணையை எம்ஏசிசி தொடங்கி இருக்கிறது என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

அதே சமயம் 2021 அக்டோபர் மாதத்திற்கு முன்னதாக மித்ரா நிதி கையாடல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புலன் விசாரணைக்கு உதவுவதற்கு 10 நிறுவனங்கள், அமைப்புகள், அரசு சாரா இயக்கங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 18 பேர் உட்பட மேலும் பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இது தவிர்த்து 22 வெளிநபர்கள், ஒரு நிறுவன இயக்குநர், ஒரு சங்கத்தின் தலைவர் கடந்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி 7 மாநிலங்களில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here