பி.ஆர். ராஜன்
கோலாலம்பூர், ஜூலை 7-
ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் களம் சுடுபிடித்து பெரும் பரபரப்பாக மாறி இருக்கிறது.
கெடா, பினாங்கு, கிளாந்தான், திரெங்கானு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் வரும் ஆகஸ்டு 12ஆம் தேதி நடைபெறவுள்ளன. இவற்றுள் கெடா, பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல், பெரிக்காத்தான் நேஷனல் ஆகியவற்றுக்கு இடையில் நடைபெறவுள்ள பலப்பரீட்சையில் வெற்றியை நிர்ணயிக்கக்கூடியவர்களாக இந்திய வாக்காளர்கள் திகழ்கின்றனர்.
நாடு சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில் மலேசிய இந்தியர்களின் ஓட்டு வங்கி 2008 பொதுத்தேர்தலுக்குப் பிறகு ஒட்டுமொத்தமாக மாறியிருக்கிறது. முதலில் பக்காத்தான் ராக்யாட் கூட்டணிப் பக்கம் இந்தியர்களின் ஆதரவு அலை திரும்பி இருந்தது. இது பின்னர் பக்காத்தான் ஹராப்பான் எனப் பெயர் மாற்றம் பெற்ற பின்னர் இந்திய வாக்காளர்களின் ஆதரவு இன்னும் வலுப்பெற்றது.
2008ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கு முன்பாக பாரிசான் நேஷனலின் அசைக்க முடியாத ஓட்டு வங்கியாக இந்தியர்கள் திகழ்ந்தனர். பாரிசான் நேஷனல் சின்னத்தில் ஒரு கழுதையை வேட்பாளராக நிறுத்தினாலும் அதனை வெற்றிபெறச் செய்யும் அளவுக்கு இந்தியர்களின் ஆதரவு அபரிமிதமாகவும் அசைக்க முடியாததாகவும் இருந்தது.
ஆனால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில் சினங்கொண்டு எழுந்த ஒரு லட்ங்த்திற்கும் அதிகமான இந்தியர்கள் 2007 நவம்பர் 25ஆம் தேதி வீதிகளில் இறங்கினர். கோலாலம்பூர் முற்றாக நிலைகுத்தியது. உலகமே அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தது.
இதற்குப் பின்னர் பாரிசான் நேஷனலின் செல்வாக்கும் சரிந்தது. தொடர்ந்து படுதோல்வியையும் அக்கூட்டணி தழுவியது. இந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த மஇகாவையும் அவர்கள் கைவிட்டனர்.
இதற்குப் பிறகும் வீதிகளில் இறங்கப்போவதில்லை என்ற முடிவில் இருக்கும் இந்திய வாக்காளர்கள் வாக்குச் சீட்டு மூலம் ஒருவிரல் புரட்சியை முன்னெடுக்கத் தயாராகி விட்டனர். இதுநாள் வரையிலும் பக்காத்தான் ஹராப்பானை முழு மனத்துடன் ஆதரித்து வந்த இந்தியர்கள் இந்த சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் பக்கம் திரும்பத் தொடங்கி இருக்கின்றனர்.
தன்னுடைய வாழ்வாதாரத்திற்குரிய எந்தவோர் ஆக்கப்பூர்வமான திட்டங்களையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் வழங்கவில்லை என்பது இந்தியர்களின் கோபமாக மாறி இருக்கிறது.
அரசுப் பல்கலைக்கழகங்கள், மெட்ரிகுலேஷன் போன்றவற்றில் இந்திய மாணவர்களுக்கான இட ஒதுக்கீடுகள் மீண்டும் ஒரு கானல் நீராகவே மாறியிருப்பதும் அவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவிட்-19 தொற்றுப் பரவல் ஏற்படுத்திய தாக்கத்தில் இரண்டு ஆண்டுகளாக வேலையையும் வருமானத்தையும் இழந்து வாழ்க்கையின் கடைக்கோடிக்குத் தள்ளப்பட்டிருக்கும் ஏழை இந்தியர்களைக் கைதூக்கி விடுவதற்கு உருப்படியான திட்டங்கள் எதுவும் வகுக்கப்படவில்லை என்பதிலும் அவர்களுக்குக் கோபம் உள்ளது.
அதே சமயம் சொந்த வீடுகளைக் கொண்டிருக்கும் இயலாமைக்கும் அவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். பி40 பிரிவு மக்களுக்காக கட்டப்படும் பிபிஆர் அடுக்குமாடி வீடுகளிலும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்பதிலும் இந்தியர்களுக்கு கோபம் இருக்கிறது.
அரசாங்க வேலை வாய்ப்புகள், பதவி உயர்வுகள், இடைநிலைப்பள்ளிகளில் முதல்வர் பதவிகள் போன்றவற்றில் ஏற்பட்டிருக்கும் ஏமாற்றங்களும் அவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கடைக்கோடியில் இருக்கும் பெரும்பான்மையான ஏழை இந்திய சமுதாயம் அரசாங்கம் வழங்கும் எஸ்டிஆர் ரொக்க உதவித் திட்டத்தில் இருந்தும் விடுபட்டிருப்பது மேலும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இவர்களுக்கு அரசாங்கத்தின் இந்த நலத் திட்டங்களைக் கொண்டு சேர்ப்பதில் இந்தியத் தலைவர்கள் தோல்வி கண்டிருக்கின்றனர் என்பது இதன்மூலம் நிரூபணமாகி இருக்கிறது. அடையாள ஆவணங்கள் விவகாரத்தில் இந்திய சமுதாயத்தினர் இன்னமும் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
இந்த நாட்டிலேயே பிறந்து இங்கேயே வளர்ந்து உழைத்து அடையாள ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் அரசாங்கம் வழங்கும் எந்தவொரு சலுகையையும் அனுபவிக்க முடியாமல் திண்டாடுவதும் இவர்களுக்கு பெரும் சினத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்தப் பிரச்சினைகளுக்கு முறையான கொள்கைகள் வகுக்கப்பட்டு இந்தியர்களை முன்னேற்றும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டால் மட்டுமே இவர்களின் ஆதரவைப் பெற முடியும் என்பதைக் களம் இறங்கி இருக்கும் அரசியல் கட்சிகள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தியர்களின் ஓட்டு வேண்டுமெனில் அவர்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதை அரசியல் கட்சிகள் வெளிப்படையாகவும் தெளிவாகவும் அறிவிக்க வேண்டும். சாலைகளில் இறங்கி, இருப்பதையும் இழப்பதற்கு இந்திய சமுதாயம் இனியும் தயாராக இல்லை. ஆனால் ஒரு விரல் புரட்சியின் மூலம் தங்களின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாக தெரிவிப்பர் – உணர்த்துவர்.





















