பாஜக உடன் தமிழ்நாட்டில் கூட்டணியை உறுதி செய்த கட்சிகளின் பட்டியல்

தமிழ்நாட்டில் பாஜக உடன் கூட்டணியை உறுதி செய்த கட்சிகள் பட்டியலில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், ஓ பன்னீர்செல்வம் அணி, புதிய நீதி கட்சி , இந்திய ஜனநாயக கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், போன்றவை அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளன.

தமிழ்நாட்டில் 2014 தேர்தல் போல் வலுவான கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலை சந்திக்க விரும்புகிறது பாஜக. பிரதமர் மோடியை ஏற்றுக்கொண்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த 2014ல் பாஜக அதிமுக உடன் கூட்டணி அமைக்கவில்லை.. அப்போது பாமக, தேமுதிக, மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு நாடு தேசிய கட்சி, புதிய நீதி கட்சி ஆகிய கட்சிகளை இணைத்து தனி அணியாக பாஜக கூட்டணி அமைத்தது. அப்போது காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிட்டது. திமுக உடன் விசிக, முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. ஜெயலலிதா தலைமையிலான அன்றைய அதிமுகவை பொறுத்தவரை தனித்தே 39 தொகுதியிலும் போட்டியிட்டது. இடதுசாரிகள் தனித்து போட்டியிட்டனர்.

இந்நிலையில் 2014 தேர்தலில் 37 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. பாஜக கூட்டணி இரண்டு இடங்களில் வென்றது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி கணிசமாக வாக்கு வங்கியை அப்போது கைப்பற்றியது. பாஜக மட்டும் 5.5 சதவீதம் வாக்குகளை பெற்றது. அதிமுக 44.3 சதவீதமும், திமுக 23.4 சதவீதம் வாக்குகளையும், காங்கிரஸ் 4.3 சதவீதம் வாக்குகளையும் வென்றது. இந்த தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்து. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

ஆனால் 2019ல் தலைகீழாக மாறியது. அதிமுக, பாமக,தேமுதிக, பாஜக எனஅனைத்து கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்தித்த போதிலும். தேனியை தவிர எதிலுமே அதிமுக கூட்டணி வெற்றி பெறவில்லை. ஆனால் திமுக கூட்டணி 53.15 சதவீதம் வாக்குகளை பெற்று 38 இடங்களில் வென்றது. ஆனால் அதிமுக பாஜ கூட்டணி வெறும் 30.57 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றதுடன் ஒரே ஒரு இடத்தில் தான் வென்றது. பாஜவால் அப்போது வெறும் 3.66 சதவீதம் வாக்குகளையே பெற முடிந்தது.

இந்நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிவிட்டது. இதையடடுத்து தமிழ்நாடடில் 2014 பாணியில் வலுவான கூட்டணி அமைக்க பாஜக முடிவு செய்தது. அதன்படி தமிழ்நாட்டில் பாஜக உடன் கூட்டணியை உறுதி செய்த கட்சிகள் பட்டிலைய பாஜகவினர் வெளியிட்டிருக்கிறார்கள். அந்த பட்டியலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ் அணி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி , இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி ஆகியவை இணைந்துள்ளன. இதில் சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு, அந்த கட்சியை அப்படியே பாஜகவில் இணைத்துள்ளார் சரத்குமார்.

டிடிவி தினகரனின் அமமுக குக்கர் சின்னத்தில் போட்டியிடுவதை உறுதி செய்தது. நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளது. இதுபற்றி டிடிவி தினகரன் கூறுகையில், பாஜக உடனான கூட்டணி உறுதி ஆகிவிட்டது. பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் டெல்லி பிரிநிதி கிஷன் ரெட்டி ஆகியோர் என்னிடம் தொலைப்பேசியில் பேசினார்கள். அவர்களிடம், பாஜகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளேன்.

கடந்த மூன்று மாதங்களாக பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இன்று (நேற்று) அதிகாரப்பூர்வமாகப் பேசினோம். அவர்களிடம் ஏற்கனவே அமமுகவின் கோரிக்கைகளைக் கடிதம் மூலமாகக் கொடுத்துள்ளோம். இந்தியாவில் உறுதியாக பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டிலே வெற்றி பெற பாஜகவிற்கு அமமுக ஒரு அணிலைப் போல் உதவிகரமாக இருக்கும்.

எங்களுக்கு எத்தனை தொகுதி என்பதெல்லாம் பிரச்சனையே கிடையாது. எங்களின் தேவை என்ன என்பது பாஜகவிற்க தெரியும். அதனால், உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். தாமரை சின்னத்தில் நிற்க வேண்டும் என்று பாஜக நிர்ப்பந்திக்கவில்லை. எங்களிடம் தனிச் சின்னம் உள்ளது” என்றார்.

இதனிடையே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் தனது அணியுடன் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். அவருடன் அண்மையில் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை நடத்தியது பாஜக தலைமைமை. அப்போது ஓபிஎஸ், தங்கள் அணிக்கு 15 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம். இதைக் கேட்டு பாஜக அதிர்ச்சியில் உறைந்து போனதாம் . இருப்பினும் அதனை வெளிக்காட்டாமல் எத்தனை தொகுதிகளை உங்களுக்கு ஒதுக்குவது என்பது பற்றி பேசி முடி வெடுத்துக் கொள்ளலாம் என்று அனுப்பி வைத்துள்ளதாம்.

பாஜகவிற்கு இந்த முறை தேமுதிக மற்றும் பாமகவை தங்களது அணியில் சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறதாம்.அதற்காக வியூகம் அமைத்து வருவதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் தேமுதிக  உடன் சேர்ந்து பிரச்சாரம் செய்து வரும் வேளளையில்  பாமக தான் இன்னமும் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை… பாஜக கூட்டணிகளுக்கு தொகுதி பட்டியல் விரைவில் வெளியாகும் என என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here