மெட்ரிலேஷன் வாய்ப்பு மறுக்கப்பட்ட 206 இந்திய மாணவர்களை உடனடியாகச் சந்திக்கத் தயார்; அஸ்மின் அலி

­கல்வியில் அனைத்து இனத்தவர்களுக்கும் சமச்சீரான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் அதீத நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கும் 206 இந்திய மாணவர்களை உடனடியாகச் சந்திக்கவிருப்பதாகவும் பெரிக்காத்தான் நேஷனல் சிலாங்கூர் மாநிலத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி  கூறினார்.

2022 எஸ்பிஎம் தேர்வில் எல்லாப் பாடங்களிலும் ஏ பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய அநியாயம் என்று அவர் சாடினார்.

11ஏ, 10ஏ, 9ஏ, 8ஏ பெற்ற மாணவர்களின் மெட்ரிகுலேஷன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த மாணவர்களுள் பெரும்பான்மையினர் பி40 தரப்பைச் சேர்ந்தவர்கள்.

தனியார் கல்லூரிகளிலோ தனியார் பல்கலைக்கழங்களிலோ படிப்பதற்குரிய வசதி இல்லாதவர்கள். கிட்டத்தட்ட 40 ஆயிரம் இடங்களைக் கொண்ட மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் இந்த 200 இந்திய மாணவர்களுக்கு இடமே இல்லையா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மக்கள் ஓசை நாளிதழுக்கு அளித்த ஒரு சிறப்பு நேர்காணலில் முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசாரும் முன்னாள் அனைத்துலக வாணிப தொழில்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ அஸ்மின், இந்த மாணவர்களை நான் உடனடியாகச் சந்திக்க விரும்புகிறேன். என்னை வந்து பாருங்கள் என்று இந்த மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்குச் சொந்தமான யூனிசெல் பல்கலைக்கழகத்தில் இவர்களுக்கு இடம் பெற்றுத் தருவேன் என்று கூறினார்.இந்த மாணவர்கள் விரும்பும் துறைகளில் சேர்ந்து படிக்கலாம்.

கல்வியில் அனைத்து மலேசியர்களுக்கும் இன, மத பேதமின்றி சமச்சீரான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக தகுதியுள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படக்கூடாது என்பதில் உறுதியான நம்பிக்கையைத் தாம் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உங்களுடைய எதிர்காலத்தை, உங்களுடைய லட்சியத்தை நீங்கள்தாம் முடிவு செய்ய வேண்டும். மற்றவர்களை அந்த முடிவைச் செய்வதற்கு அனுமதிக்காதீர்கள். இது உங்களது சொந்த எதிர்காலம். பெரிக்காத்தான் நேஷனல் இந்தியர்களைச் சமமாக நடத்த விரும்புகிறது.

உண்மை நிலையில் இந்த 206 மாணவர்களுக்கும் உள்நாட்டு அரசுப் பல்கலைக்கழகங்களில் உடனடியாக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். எனக்கு அதிகாரம் இருந்தால் இவர்கள் அனைவரையும் உடனடியாக உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளும்படி உத்தரவு பிறப்பிப்பேன்.

இந்த 206 இந்திய மாணவர்களும் தேசிய நீரோட்டத்தில் வைக்கப்பட வேண்டியவர்கள். இவர்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுப்பதற்கு பெரிக்காத்தான் நேஷனல் தயாராக இருக்கிறது. யூனிசெல் பல்கலைக்கழகத்தில் இவர்களுக்கு இடம் கொடுத்து பாதுகாக்கும் பொறுப்பையும் பெரிக்காத்தான் நேஷனல் ஏற்கும்.

என்னுடைய உடனடி கவனம் எல்லாம் பாதிக்கப்பட்ட இந்த 206 மாணவர்களையும் சந்திப்பதுதான் என்று டத்தோஸ்ரீ அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

– பி.ஆர்.ராஜன், எஸ்.வெங்கடேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here