கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 12:
இன்று பரபரப்பாக நடைபெற்று வரும் 6 மாநில தேர்தல்களில் , பிற்பகல் 2 மணி நிலவரப்படி, சுமார் 50 விழுக்காட்டினர் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர்.
எல்லா வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்காளர்கள் நிறைந்து காணப்படுவதாக மக்கள் ஓசை நிருபர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாக்களிப்பு சுமூகமாக நடைபெறுவதற்கு வானிலை சாதகமாக துணைபுரிகிறது.
இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு மையங்கள் திறக்கப்பட்டபோது, மாநில தேர்தல் நடைபெறும் ஆறு மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளில் வெயிலாகவும், சாதகமாகவும் வானிலை நிலவியது.
பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கெடா, திரெங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள வாக்காளர்கள், இந்த நல்ல வானிலையைப் பயன்படுத்தி, வாக்களிக்கும் நிலையங்கள் திறக்கப்படுவதற்கு முன்பே வாக்களிக்கச் சென்றதாகவும் அறியமுடிகிறது.
இதுதவிர கோலா திரெங்கானு நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெறுகிறது.
9.67 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஆறு மாநிலத் தேர்தல்களிலும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.








