யங்கூன், ஆகஸ்ட்டு 14:
வடக்கு மியன்மாரில் உள்ள மாணிக்கக் கல் சுரங்கத்தில் நேற்று (ஆகஸ்ட்டு 13) ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, குறைந்தது 25 பேர் காநம்மால் போயுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் இன்று தெரிவித்தனர்.
மியன்மாரின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வெள்ளக்காடானதைத் தொடர்ந்து, அங்கு இந்த நிலச்சரிவு சம்பவம் ஏற்பட்டது.
“நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்குச் செல்வதற்குச் சிரமமாக இருப்பதால் காணாமல்போனவர்கள் குறித்த விவரங்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத மீட்புப் பணியாளர் ஒருவர் AFP செய்தி நிறுவனத்திடம்தெரிவித்ததாக அது செய்திவெளியிட்டுள்ளது.
காணாமல்போனவர்களைத் தேடி மீட்கும் பணி தொடர்வதாக கூறிய அவர், மாணிக்கக் கற்களைத் தேடும் நம்பிக்கையுடன் சில ஊழியர்கள் சம்பவ இடத்துக்குத் திரும்பிவிட்டதாகக் கூறினார்.
“இதுவரை சடலம் எதையும் நாங்கள் கண்டெடுக்கவில்லை,” என்றார் அவர்.
அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவினாலும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்கான முயற்சி தொடர்வதாக மற்றொரு மீட்புப் பணியாளர் ஏஎஃப்பியிடம் கூறினார்.
“நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் காணாமல்போனவர்களைத் தேடுவது மீட்புப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பானதல்ல,” என்றும் அவர் கூறினார்.
மேலும் மழைக்காலத்தின்போது மாணிக்கக் கல் சுரங்கத்தின் செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். எனினும், நிலச்சரிவில் சிக்கிக்கொண்டவர்கள் சேறு, சகதியில் மாணிக்கக் கற்களைத் தேடி கண்டுபிடிக்கும் வேட்கையில் இருந்ததாக அறியமுடிகிறது.





















