புத்ராஜெயாஆகஸ்ட் 21, :
பினாங்கில் கடலுக்கடி சுரங்கப்பாதைத் திட்டம் தொடர்பாக அவதூறு செய்ததற்காக, முன்னாள் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீமுக்கு நஷ்டஈடாக RM250,000 வழங்குமாறு, பினாங்கு முன்னாள் முதல்வர் லிம் குவான் எங்கிற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
நீதிபதிகள் டத்தோ அசிசா நவாவி, டத்தோஸ்ரீ மரியானா யாஹ்யா மற்றும் டத்தோ அசிமா உமர் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட நீதிபதிகள்குழு, அப்துல் அஜீஸின் மேல்முறையீட்டு வழக்கின் பிரதிவாதியான் லிம், அவருக்கு வழக்கு செலவான 70,000 ரிங்கிட்டையும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
பிப்ரவரி 28, 2018 அன்று பினாங்கு முதல்வர் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போதும், அதே நாளில் பினாங்கு வளர்ச்சிக் கழகம் நடத்திய சீனப் புத்தாண்டு திறந்த இல்லத்தின்போதும் “அப்துல் அஜீஸை கடலுக்கடியில் சுரங்கப்பாதைத் திட்டத்தை உருவாக்குபவரிடமிருந்து ஆலோசனைக் கட்டணமாக RM3 மில்லியன் வாங்கியதாக அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறி, மார்ச் 2018 இல், அப்துல் அஜீஸ் லிம் மீது வழக்குத் தொடர்ந்தார்.
2020 டிசம்பர் 11 அன்று லிம்முக்கு எதிரான அவதூறு வழக்கை தள்ளுபடி செய்த பினாங்கு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, அப்துல் அஜீஸ் மேல்முறையீடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.









