எல்மினா விமான விபத்து: முகமட் ஹஃபிஸ் குடும்பத்தினருக்கு மாதாந்திர சொக்சோ இழப்பீடு

சுங்கைபட்டாணி:

கஸ்டு 17ஆம் தேதி ஷா ஆலம், எல்மினா பகுதியில் சிறுரக விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்தில் உயிரிழந்த பி-ஹெய்லிங் ஓட்டுநர் முகமட் ஹஃபிஸ் முகமட் சாலேயின் வாரிசுக்கு, அடுத்த மாதம் தொடங்கி சொக்சோ இழப்பீடு மாதாந்திர முறையில் வழங்கப்படவுள்ளது.

சமூகப் பாதுகாப்புச் சட்ட ஒதுக்கீட்டின் வாயிலாக அவர்களுக்கு மாதந் தோறும் 1,894.75 ரிங்கிட் இழப்பீடு வழங்கப்படவிருப்பதாக சொக்சோ அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான் அஸிஸ் தெரிவித்தார்.

முகமட் ஹஃபிஸ் மரணமுற்ற தேதி தொடங்கி கணக்கில் எடுக்கப்பட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது. அவர் முன்னதாக 1969 தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தொழிலாளர் காப்புறுதித் திட்டத்தில் சந்தா செலுத்தியுள்ளார்.

அதன்பின் 2021 மே 10ஆம் தேதி தொடங்கி 2017 சுயதொழில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழும் காப்புறுதி சந்தா செலுத்தியுள்ளார். இந்தச் சுயதொழில் காப்புறுதித் திட்டத்தின் கீழ் அவரின் வாரிசுகள் 1,116 ரிங்கிட் இழப்பீடு பெறுவதற்கான தகுதி உள்ளது.

இது தவிர ஏற்கெனவே நிறுவனம் ஒன்றில் வேலை செய்தபோது தொழிலாளர் பாதுகாப்பு காப்புறுதி சந்தா செலுத்தியதற்கான தரவுகள் உள்ளதால் அதற்காக மாதந்தோறும் 778.75 ரிங்கிட் இழப்புத் தொகையும் வழங்கப்படும் என்று நேற்று தாமான் சிடாம் கிரியில் உள்ள முகமட் ஹஃபிஸின் குடும்பத்தைச் சந்தித்தபோது முகமட் அஸ்மான் இத்தகவல்களைச் செய்தியாளர்களிடம் பகிர்ந்தார்.

நேற்று முகமட் ஹஃபிஸின் குடும்பத்தாரிடம் அஸ்மான் இறுதிச்சடங்குகளுக்கான இழப்பீட்டுத் தொகை 2 ஆயிரம் ரிங்கிட்டை வழங்கினார். இந்நிலையில் இந்த 1,894.75 ரிங்கிட் மாதாந்திர இழப்புத் தொகையானது முகமட் ஹஃபிஸின் பெற்றோர், சகோதரருக்குச் சென்றடையும்.

எனவே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எதுவும் நிகழலாம் என்பதால் இ-ஹெய்லிங், பி-ஹெய்லிங் ஓட்டுநர்கள் அனைவரும் இந்தச் சம்பவத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டு சுயதொழில் காப்புறுதித் திட்டத்தில் பதிவுசெய்ய வேண்டும் எனவும் அஸ்மான் கேட்டுக்கொண்டார்.

உணவு, பொருள் அனுப்பும் பணியைச் செய்யும் பலரும் இன்னமும் இத்திட்டத்தில் பதிவுசெய்துகொள்ளவில்லை என்பதை நாம் உணர்கின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here