மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வெட்டிக் கொலை

திருப்பூர்:

தோட்டத்து வீட்டின் முன்பு அமர்ந்து மது குடித்ததை தட்டிக்கேட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் உள்ளிட்ட நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொல்லப்பட்டவர்களின் உடல் உறுப்புகளை கொலையாளிகள் துண்டுத்துண்டாக வெட்டி, வீசி சென்றுள்ளனர்.

பல்லடத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்த அவர், சரக்குகளைக் கொண்டு சேர்க்கும் வாகனத்தைப் பயன்படுத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அந்த வாகனகத்தை ஓட்டுவதற்கு ஓட்டுநர் ஒருவரை நியமித்திருந்தார் செந்தில்குமார். எனினும் ஓட்டுநரின் நடவடிக்கைகள் சரியாக இல்லை என்பதால் பணியில் இருந்து நீக்கியுள்ளார்.

இதையடுத்து, அந்த ஓட்டுநர், நாள்தோறும் செந்தில்குமார் வீட்டுக்கு வரும் பாதையில் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த செந்தில்குமார், வேறு இடத்துக்குச் சென்று மது அருந்துமாறு எச்சரித்ததாகத் தெரிகிறது. ஆனால் பலமுறை எச்சரித்தும் அந்த ஓட்டுநர் தன் வழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை.

இந்நிலையில், சனிக்கிழமையன்று இரவு தன் வீட்டுக்குச் செல்லும் வழியில் அந்த ஓட்டுநர் மட்டுமல்லாமல், அவரது இரு நண்பர்களும் சேர்ந்து மது அருந்தியதைக் கண்டு செந்தில்குமார் கடும் கோபமடைந்தார்.

“உடனடியாக இங்கிருந்து கிளம்புங்கள். இல்லையெனில் காவல்துறைக்கு தகவல் தெரிவிப்பேன்,” என்று அவர் எச்சரித்ததை அடுத்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.

ஒரு கட்டத்தில் ஓட்டுநரும் அவரது நண்பர்களும் செந்தில்குமாரை மறைத்து வைத்திருந்த அரிவாள்களைக் கொண்டு வெட்டியுள்ளனர்.

அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு வீட்டுக்குள் இருந்து அவரது அண்ணன் மோகன்ராஜும் அவரது தாயார் புஷ்பவதியும் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர்.

இதைக்கண்டு மதுபோதையில் இருந்த மூன்று பேரும் மேலும் ஆவேசமடைந்தனர். மோகன்ராஜையும் அவரது தாயாரையும் அவர்கள் கொடூரமாகத் தாக்கியபோது, புஷ்பவதியின் இளைய சகோதரியும் ஓடோடி வந்தார். கொலைவெறியில் இருந்த மூவரும் அவரையும் விட்டுவைக்காமல் அரிவாளால் வெட்டித் சாய்த்தனர்.

அதன் பிறகும் வெறி அடங்காத நிலையில், கொல்லப்பட்டவர்களின் உடல் உறுப்புகளையும் தனித்தனியே அறுத்தெடுத்து ஆங்காங்கே வீசிச் சென்றுள்ளது அந்த மூவர் கும்பல்.

கொல்லப்பட்ட மோகன்ராஜ் பல்லடம் பகுதி பாஜக நிர்வாகியாக இருந்தார். அதனால் அப்பகுதி பாஜகவினர் கொந்தளிப்பில் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமையன்று அவரது உறவினர்களும் பாஜகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் கைது செய்யப்படுவர் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here