7 நிமிடங்களில் வேலை செய்யும் புற்றுநோய் மருந்து… அசத்தும் இங்கிலாந்து

உலகில் எத்தனையோ நோய்கள் இருந்தாலும் மிக கொடிய நோயாக கருதப்படுவது புற்றுநோய். புற்றுநோயை எதிர்கொண்டு நம்மால் வாழ முடியும் என்றாலும், அந்த சிகிச்சை முறையாக செயல்பட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. இந்நிலையில் தான் இங்கிலாந்தில் புற்றுநோய்க்கு எதிராக 7 நிமிடங்களில் செயலாற்றத் தொடங்கும் புதிய வகை ஊசி மருந்தை கண்டுபிடித்திருக்கிறது இங்கிலாந்து மருத்துவத் துறை.

இதனால், இங்கிலாந்தின் அரசு நடத்தும் தேசிய சுகாதார சேவை (NHS) நூற்றுக்கணக்கான புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை நேரத்தை கணிசமாகக் குறைக்கக்கூடிய ஒரு அற்புதமான ஊசியை வழங்கும் உலகின் முதல் சுகாதார அமைப்பாக மாறியுள்ளது. இந்த புதுமையான சிகிச்சை முறை தோலில் ஊசி மூலம் அட்சோலிசுமாப் என்ற நோயெதிர்ப்பு சிகிச்சை மருந்தை நோயாளிகளுக்கு வழங்குகிறது.

இந்த ஊசியை அங்கீகரிக்க வேண்டும் என்று MHRA எனப்படும் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் NHS விண்ணப்பித்துள்ளது. இந்த ஊசி மருத்திற்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால் உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனக் கூறப்படுகிறது. தற்போது வழங்கப்படும் சிகிச்சை முறையில் நோய் எதிர்ப்பு மருந்து செயலாற்ற 30 நிமிடங்கள் முதல் ஒருமணி நேரம் வரை எடுத்துக்கொள்கிறது. இந்த கால தாமதத்தை தவிர்ப்பதற்காவே புதிய ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் இங்கிலாந்து மருத்துவர்கள்.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஊசியால் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் காலம் மூன்றில் ஒரு பங்காக குறையும் எனக் கூறுகின்றனர். தற்போது புற்றுநோய் சிகிச்சைக்கு அடிஸோலிசூமாப் என்ற மருந்தை குளுக்கோஸ் ஏற்றுவது போல் டிரிப் மூலம் உட்செலுத்தி வருகின்றனர். இது வேலை செய்ய 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகும். இந்நிலையில் தான் ஊசி மூலம் செலுத்தி விரைவாக வேலை செய்ய வைக்க திட்டமிட்டுள்ளனர். வெறும் 7 நிமிடங்கள் போதும். மேற்குறிப்பிட்ட மருந்து நுரையீரல், மார்பு, கல்லீரல், சிறுநீரகம் என பல்வேறு விதமான புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறது.

இங்கிலாந்தை பொறுத்தவரை ஆண்டுதோறும் 3,600 பேர் அடிஸோலிசூமாப் மருந்து அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது புற்றுநோய் ஊசி கண்டுபிடிக்கப்பட்டதால் இன்னும் பல பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும். வழக்கமான கீமோதெரபி போலல்லாமல், இந்த சிகிச்சையானது உடலின் இயற்கையான பாதுகாப்புகளை மேம்படுத்தும் வகையில் புற்றுநோய் செல்களைத் தேடி அழிக்க உதவுகிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது மிக முக்கியம் என்பதால், ஊசி மூலம் தோலின் கீழ் மருந்து செலுத்தும் இந்த சிகிச்சை முறையானது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார் NHS-ன் புற்றுநோய் மருத்துவ சிகிச்சை மையத்தின் இயக்குநர் பீட்டர் ஜான்சன்.இந்த மருந்தை தயாரித்துள்ள ரோச் நிறுவனத்துடனான முந்தைய ஒப்பந்தத்தால் இந்த சிகிச்சைக்கு அதிகப்படியான செலவாகாது என்றும் பீட்டர் ஜான்சன் நம்பிக்கை அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here