இந்தியரை கொன்றவர் சுட்டுக்கொலை: இந்தியா மீது பாக்., சந்தேகம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில், சரப்ஜித் சிங் என்ற இந்தியரை அடித்துக் கொன்றவரை, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் இந்தியாவிற்கு தொடர்பு இருக்கலாம் என விசாரணை அமைப்பினர் சந்தேகப்படுகின்றனர் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கைது: இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் டரன் மாவட்டத்தில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பிகிவின்ட் நகரைச் சேர்ந்தவர் சரப்ஜித் சிங். எல்லை தாண்டியதாகக் கூறி, இவரை கடந்த 1990ல் பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. லாகூர் மற்றும் பைசலாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் சரப்ஜித் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இந்த வழக்கில், அவரை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், 1991ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. சரப்ஜித் சிங் பல முறை கருணை மனு தாக்கல் செய்தார். அதை ஏற்று 2012ல் பாக்., அதிபராக இருந்த ஆசிப் அலி சர்தாரி, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார்.

உயிரிழப்பு: இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு லாகூரின் கோட் லக்பத் சிறையில் இருந்த சரப்ஜித் சிங்கை, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உடன் தொடர்புடைய அமிர் சர்பராஸ் மற்றும் முடாசார் இருவரும் கடுமையாக தாக்கினர். இதில், சரப்ஜித் சிங் பலத்த காயமடைந்தார். 8 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சுட்டுக்கொலை: தாக்கியவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டாலும், அவர்களுக்கு எதிராக ஆதாரம் இல்லை எனக்கூறி நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனையடுத்து சர்பராஸ், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹபிஸ் சயீத்துடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நேற்று முன்தினம்( ஏப்.,14) இஸ்லாம்புரா பகுதியில் சர்பராசை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

சந்தேகம்: இந்நிலையில் பாகிஸ்தான் மோஷீன் நக்வி கூறியதாவது: சர்பராஸ் கொலை வழக்கில் இந்தியாவின் பங்கு இருக்கக்கூடும் என விசாரணை அமைப்புகள் சந்தேகம் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் மண்ணில் மேலும் 4 பேரை கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவிற்கு பங்கு உள்ளது. விசாரணை முடிந்த பிறகே விரிவான அறிக்கை வெளியிட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here