அடியே பாடலில் வலைவீசி இதயங்களைக் கொள்ளையிட்டவர் அரங்கத்தில் இசைப்போர் நடத்த வருகிறார்.
பிரபலப் பாடகர் சித் ஸ்ரீராமின் இசை நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் கோலாலம்பூரில் அரங்கேறவுள்ளது. சித் ஸ்ரீராம் மலேசியாவில் படைக்கும் நான்காவது இசை நிகழ்ச்சியாகும் இது.
இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு மக்கள் ஓசை பத்திரிகையும் மக்கள் ஓசை வலைத்தளங்களும் அதிகாரத்துவ செய்தி ஊடகமாக பங்காற்றுகிறது என்பது சிறப்பாம்சம். மக்கள் ஓசை வாசகர்களையும் வலைத்தளப் பார்வையாளர்களையும் பயனீட்டாளர்களையும் மகிழ்விக்கும் வண்ணம் பல்வேறு வகையிலான போட்டிகளின் வாயிலாக இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை மக்கள் ஓசை வழங்குகிறது. அந்தப் போட்டிகளில் பங்கேற்று நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை ரசிகர்களும் வாசகர்களும் தட்டிச் செல்லலாம்.
இதயங்களிலும் ஆன்மாவிலும் சித் ஸ்ரீராம் 3.0 ( அட் த ஹாட் – சோல் 3.0 லைவ் இன் கே.எல்.) என்ற இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சி எதிர்வரும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி புக்கிட் ஜாலில், அக்ஸியாத்தா அரேனா அரங்கில் நடைபெறவிருக்கிறது. வூட் மார்க் ஈவண்ட்ஸ் நிறுவனம் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியைப் படைக்கிறது. ஏற்கெனவே வூட் மார்க்கின் ஏற்பாட்டில் கடந்த 2019, 2020, 2022ம் ஆண்டுகளில் சித் ஸ்ரீராமின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகள் கோலாலம்பூரிலும் பினாங்கிலும் நடைபெற்றதோடு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவிலும் நடைபெற்றன.
வூட் மார்க் சித் ஸ்ரீராமைக் கொண்டு படைக்கும் ஐந்தாவது நிகழ்ச்சியாகும் இது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு காரணமாக அவரை வைத்தே மீண்டும் இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதாக வூட் மார்க் தரப்பு தெரிவித்தது. மலேசியாவில் நடைபெறும் சித் ஸ்ரீராமின் இசை நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடுகளில் இருந்து கூட ரசிகர்கள் நம் நாட்டிற்குப் படையெடுக்கின்றனர். அந்த அளவுக்கு ரசிகர்களை வசியப்படுத்தி விட்டார் சித் ஸ்ரீராம். இப்போது நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளும் அதற்குள் விற்றுத் தீர்ந்து விட்டதே அவரைக் காண ரசிகர்கள் கொண்டுள்ள ஆர்வத்திற்குச் சான்று.
பாடகர் சித் ஸ்ரீராமுக்கு அறிமுகப்படலங்கள் அவசியமேயில்லை. இதயங்களுக்குச் சிறகு பூட்டி பறக்கச் செய்யும் இதமான குரல் வளம் கொண்ட மந்திரவித்தகர் இவர். பாடகர் என்ற முகாந்திரத்தைக் கொண்டு திரை இசை மேடை கச்சேரி, இசை நிகழ்ச்சி, பாடலாசிரியர், இசையைமைப்பு என்று பல துறைகளிலும் வித்தகம் புரிந்து ரசிகர் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் சித் ஸ்ரீராம்.
உலகம் முழுவதும் லட்ச்சோப லட்ச ரசிகர்களின் இதயங்களை தன் மென்வைமயான குரலால் வசியப்படுத்திய சித் ஸ்ரீராம் மலேசியாவிலும் ஆயிரமாயிரம் உள்ளங்களைக் கொள்ளையிட்டிருக்கிறார் என்பதற்கு கடந்த ஆண்டு இங்கு நடந்த இசை நிகழ்ச்சியே மிகப் பெரிய சான்று. சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் மலேசியாவில் நடைபெற்ற அவரது இரண்டு நாள் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் இரண்டே மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன. அந்த அளவுக்கு தீவிர இசை ரசிகர்களை அவர் மேலசியாவில் கொண்டிருக்கிறார். ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்ற அந்த இசைநிகழ்ச்சியின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்போது மற்றோர் இசைப்படைப்பு மலேசியாவில் அரங்கேறவிருக்கிறது.
இதயங்களிலும் ஆன்மாவிலும் சித் ஸ்ரீராம் 3.0, மலேசிய ரசிகர்களுக்குக் இசை விருந்து கொண்டாட்டமாக அமையும். அக்டோபர் 7ஆம் தேதி நடைபெறும் இந்த இசைநிகழ்ச்சியும் மாபெரும் வெற்றியடையும் என்பதில் ஐயமேயில்லை. இந்த இசைப் படைப்பிற்கும் டிக்கெட்டுகள் நிச்சயம் விற்றுத் தீரும் என்று வூட்மார்க் ஈவண்ட்ஸ் அறிக்கை வழி தெரிவித்திருக்கிறது.
சித்தார்த் ஸ்ரீராம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1990ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி சென்னையில் பிறந்தவர். இளம் வயதிலேயே கலிபோர்னியாவுக்குச் சென்ற இவரது குடும்பம் பின்னர் பிரெமோண்டிற்கு இடம் பெயர்ந்தது.
2010ஆம் ஆண்டு முதல் இசைத் துறையில் பிரகாசிக்கத் தொடங்கினார் இவர். 2013ஆம் ஆண்டு ஏர்.ஆர்.ரஹ்மான் இசையில் கடல் படத்தில் அடியே என்ற பாடல் வழி ரசிகர்களின் இதயங்களில் முத்திரைப் பதித்தவர் சித் ஸ்ரீராம். 33 வயதாகும் இவர் தமிழிலும் தெலுங்கிலும் ஏராளமான பாடல்களைப் பாடி இருக்கிறார். இந்திய அமெரிக்க கர்நாடக இசைத் துறையில் புழ்ப்பெற்றவராக விளங்குகிறார் சித் ஸ்ரீராம். ஸ்ரீ சினி அவார்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் இவரை அலங்கரிக்கின்றன.




















