கடந்த இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ சேப்பியன் என்ற இனத்தில் இருந்துதான் நவீன மனிதன் தோன்றினான் என்றும், முதன் முதலில் ஆப்பரிக்காவில் தோன்றிய இந்த ஹோமோ சேப்பியன் இனம் படிப்படியாக ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் உலகின் மற்ற பகுதிகளை நோக்கி இடம்பெயர்ந்தார்கள் என்றும் தான் இதுவரை நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் நம் நம்பிக்கையை அசைத்து பார்க்கும் அளவிற்கு அண்மைக் காலமாக பல்வேறு புதை பொருள் படிமங்கள் வெளிக் கொணரப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் நாட்டில் ஒரு விமான நிலையம் அருகில் குசேம் என்ற குகையில் சுமார் நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதி மனிதனின் எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மூலம் மனித இனம் ஆப்பரிக்காவில் தோன்றியது என்பது உண்மை தானா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இப்போது அந்தக் கேள்வியை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு மனிதக் குரங்கின் மண்டை ஓட்டுப் புதை படிமம் கிடைத்துள்ளது. அதுவும், தென்கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவின் எல்லையில் அமைந்துள்ள துருக்கியில் இந்த மிகவும் பழமையான புதைப் படிமம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டோலூவியுஸ் டர்கே என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மனிதக் குரங்கு சுமார் 8 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது என்றும், இது தான் மனித இனத்தின் முதல் தொடக்கமாக இருந்திருக்கக் கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இதன் மூலம் மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் தான் மனித இனத்தின் முதல் உயிரினம் தோன்றியிருக்கக் கூடும் என்றும் சுமார் ஐந்து மில்லியன் ஆண்டுகளாக அந்தப் பகுதியில் வாழ்ந்த பிறகு ஆப்பரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்திருக்கலாம் என்றும் விளக்கம் அளிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.



















