1,000 ஆண்டுகள் பழமையான 2 வேற்றுகிரகவாசிகளின் மம்மி உடல்கள் கண்டெடுப்பு

கஸ்கோ:

வேற்றுகிரகவாசிகள், பறக்கும் தட்டுகள் போன்ற விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியமூட்ட கூடிய விசயங்கள் அவ்வப்போது விவாதிக்கப்பட்டு வருகின்றன. அவை உண்மையில் உள்ளனவா? அல்லது கற்பனை விசயங்களா? என்பதும் ஆய்வு பொருளாக உள்ளது.

எனினும், விமான பயணத்தின்போது நடுவானில் பறக்கும் தட்டுகளை சந்தித்த அனுபவங்களை சில விமானிகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், பெரு நாட்டின் கஸ்கோ நகரில் சுரங்க பகுதியில் இருந்து 2 வேற்றுகிரகவாசிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன என தகவல் வெளியானது.

இதுபற்றி மெக்சிகோ நாட்டின் தேசிய தன்னாட்சி பல்கலை கழகத்தில் கார்பன் பகுப்பாய்வு முறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த உடல்கள் சராசரி மனிதரை விட மிக சிறிய அளவில் இருந்தன. அவை கண்ணாடி பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றின் கண்கள், ஒரு மூக்கு மற்றும் வாய் ஆகியவை நன்றாக தெரிய கூடிய வகையில் இருந்தன.

இந்த உடல்களில் ஒன்றின் உள்ளே முட்டைகளும் காணப்படுகின்றன. ஆஸ்மியம் எனப்படும் அரிய வகை உலோகங்களும் அவற்றின் உடல்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.

இதுபற்றி வேற்றுகிரகவாசிகளை பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் மற்றும் பத்திரிகையாளரான ஜெய்மி மவுசன் என்பவர் கூறும்போது, இவை நம்முடைய நில பகுதியில் பரிணாம வளர்ச்சி பெற்றவர்களின் ஒரு பகுதியினர் அல்ல என கூறுகிறார். அதனால், அவை மனிதர்கள் அல்லாத உடல்களாக பார்க்கப்படுகின்றன. அவை மம்மிகள் வடிவில் வைக்கப்பட்டு உள்ளன.

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மற்றும் மனிதர்கள் அல்லாதவர்கள் என நம்பப்படும் இந்த இரண்டு உடல்களும் மெக்சிகன் நாடாளுமன்றத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன. இதில், அமெரிக்காவின் கடற்படையை சேர்ந்த விமானி ரியான் கிரேவ்ஸ் என்பவரும் கலந்து கொண்டு பேசினார். அவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2 மாதங்களுக்கு முன்பு பேசும்போது, பறக்கும் தட்டுகளை நேரடியாக எதிர்கொண்டேன் என்று கூறினார். கடந்த 2017-ம் ஆண்டில் பெரு நாட்டில் 5 மம்மிகள் கண்டெடுக்கப்பட்டன என மவுசன் கூறினார். அவை, மனிதர்களின் குழந்தைகள் என பின்னர் அடையாளம் காணப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here