ஒரே விமானத்தில் வந்த 60 பேரிடம் தங்கம் பறிமுதல்

சென்னை: ஓமான் நாட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட பயணிகளிடம் இருந்து விதிமுறைகளை மீறி கொண்டு வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஓமான் தலைநகர் மஸ்கட்டில் இருந்து சென்னை வந்தடைந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகள் அனைவரும் வழக்கமான சுங்கப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

வியாழக்கிழமை வந்த அந்த விமானத்தில் 186 பயணிகள் இருந்தனர். இந்நிலையில், அந்தப் பயணிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கம் கடத்தி வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரமடைந்தது.

அக்குறிப்பிட்ட விமானத்தில் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 110க்கும் மேற்பட்ட பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேககம் எழுந்தது. எனவே, அவர்கள் அனைவரும் தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சோதிக்கப்பட்டனர்.

ஆடைகளைக் களைந்தும் சோதனை நடத்தப்பட்டதாகவும் அப்பயணிகளின் உடைமைகளும் தீவிரமாக சோதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

காலை எட்டு மணிக்குத் தொடங்கிய சோதனை மாலைவரை நீடித்தது என்றும் அதன் முடிவில் 60 பேரிடம் கடத்தல் தங்கம் இருப்பது தெரியவந்தது என்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இதர பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.

மஸ்கட்டில் இருந்து விமானம் புறப்படும் முன்னர், சிலர் தங்களை அணுகி, இனிப்புகள், வாசனத் திரவியங்களைப் பரிசாகக் கொடுத்ததாகவும் அவற்றுடன் தங்கம், ஐபோன்களையும் கொடுத்து அனுப்பியதாகவும் பிடிபட்டவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, தங்கத்தையும் விலை உயர்ந்த கைப்பேசிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், நாற்பது பேரிடம், ‘இனிபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம்’ என்று எழுதி வாங்கிக்கொண்டு, கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.

மேலும் சிலரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. தவிர, அபராத தொகையைச் செலுத்திய பின்னர் தங்கம், கைப்பேசிக் கருவிகளைப் பெற்றுச் செல்லலாம் என சிலருக்கு அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

சென்னை, திருச்சிக்கு சில நாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருபவர்கள் அடிக்கடி சுங்கப் பரிசோதனையில் சிக்குகின்றனர். எனினும், ஒரே விமானத்தில் வந்த இவ்வளவு பேர் பிடிபட்டது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here