சிறார்களுக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த சமூகநலச் சிந்தனைகள் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும்

கோலாலம்பூர்:

சிறார் சித்திரவதைச் சம்பவங்கள் நாட்டில் தொடர்ந்து அதிகரிப்பது கவலைக்குரிய விஷயம் என்பதோடு கவனிக்கப்பட வேண்டிய விஷயமுமாகும் என்று  மகளிர், குடும்ப சமூகநல மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹஜ்ஜா நான்சி ஷுக்ரி வலியுறுத்தினார்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் வரையில் மொத்தம் 2,959 சிறார் சித்திரவதைச் சம்பவங்கள் அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட் டன. அதில் 326 சம்பவங்கள் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்தில் நிகழ்ந்தவையாகும்.

சிறார் சித்திரவதைச் சம்பவங்களில் சிலாங்கூர் மாநிலம் முன்னிலை வகிக்கும் வேளையில், இரண்டாவது இடத்தில் சபா மாநிலமும் மூன்றாம் இடத்தில் கோலாலம்பூரும் இடம்பெற்றிருக்கின்றன. சிறார்கள் சித்திரவதை  செய்யப்படுவதும் சிறார் நலன்கள் புறக்கணிக்கப்படுவதும் வாரந்தோறும் அரங்கேறும் அவலமாகிவிட்டது.

இவ்வாறான கொடுமை களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். சிறார்களுக்கும் அவர்களது உரிமைகள் பற்றிய புரிதல் மிக அவசியம். சிறார்களிடத்தே எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்ற உணர்வுகள் பெற்றோருக்கும் சிறார்களின் சுற்றுப்புறத்தைச்   சார்ந்தோருக்கும் மிக முக்கியம். பிள்ளைகள் நலன் காக்கும் பொறுப்பு யாவருக்குமே உண்டு.  பள்ளி ஆசிரியர்கள், ஆலோசகர்கள். பெற்றோர் – ஆசிரியர் சங்கம் என்று அனைத்து தரப்பினருமே இதில் முக்கிய கடப்பாட்டைக் கொண்டிருக்கிறோம்.

சிறார்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதையும் அவர்களின் நலன் புறக்கணிக்கப்படுவதையும் கண்காணித்து அவர்களை அரவணைத்து பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்குமே உண்டு. சிறார் துன்புறுத்தல் சம்பவங்களைக் கண்டால் அந்தக் குழந்தையைக் காப்பாற்றுவதற்கான முழு விவரங்கள் குறித்தும் சமுதாயத்தினர் அறிந்திருக்க வேண்டியது மிக முக்கியம் என நேற்று முன்தினம் கோலாலம்பூர், செராஸ், ஸ்ரீதாசேக் தேசியப் பள்ளியில் சிறார்களுக்குப் பக்கத்துணையாக இருப்போம், சிறார்களை நேசிப்போம் என்ற அம்சத் திட்டத்தை  அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிபோது அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

இத்திட்டம் விரைவில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்படும் என அவர் கூறினார்.

சிறார் மேம்பாட்டு இலாகா ஒன்று தோற்றம் காணும் என்று அண்மையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டபோது நிதி அமைச்சு அறிவித்திருக்கிறது. சமூக மேம்பாட்டு வாரியத்தின் பங்களிப்பு இதில் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. சிறார் நலன்கள் சார்ந்த விவகாரத்தில் இந்த வாரிய அதிகாரிகளின் (ஜே.பி.கே.கே.) செயற்பாடுகள் பரந்து விரிந்ததாகும். சிறார், முதியோர், மாற்றுத் திறனாளிகள், உதவி தேவைப்படும் நிலையிலிருப்போர் போன்றோருக்கு ஜே.கே.எம். அதிகாரிகளின் உதவிகள் மிக அதிகமாகத் தேவைப்படுகின்றன.

சீரமைப்புகளுக்கு மட்டுமன்றி, நிதியுதவிகள் நல்குவது, சட்ட ஆலோசனை போன்ற பல்வேறு பொறுப்புகளையும் அவர்கள் கொண்டுள்ளனர். சிறார் நலன் சார்ந்த சேவைகளுக்கு எவ்வாறான அணுகுமுறைகள் தேவைப்படுகிறது என்பதை ஜே.பி.கே.கே. வாயிலாக துல்லியமாகக் கண்டறிய முடியும். மாநில, மாவட்ட சமூகநல அலுவலகங்கள் மட்டுமல்லாமல் சிறார் கழகங்களில் வழங்கப்படும் சேவைகள் பற்றியும் அறிந்து செயல்பட இது வாய்ப்பளிக்கும்.

அதே வேளையில் சமூகப் பாதுகாப்பு மன்ற அதிகாரிகளின் சுமையையும் குறைக்கக் கூடியதாக இந்நடவடிக்கை அமைந்திருக்கும். சிறார் சீரமைப்பு நடவடிக்கைகள், குடும்ப வன்முறைகள், சிறார் பராமரிப்பகங்கள், ஆதரவற்றோர் மையங்கள் போன்றவற்றை உட்படுத்திய விவகாரங்களுக்குத் தீர்வு காண தற்சமயம் 108 பேருக்கு 1 அதிகாரி என்ற வகையிலேயே  இந்தச் சமூகப் பாதுகாப்பு மன்ற அதிகாரிகளின் எண்ணிக்கை அமைந்திருக்கிறது.

நாடளாவிய நிலையில் 92 லட்சம் இளம் சிறார்கள் உள்ளனர். சிறார்களின் நலனைக் காக்கும் கடமை முழுக்க முழுக்க அரசாங்கத்தை மட்டுமே சார்ந்தது அல்ல.  மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துறை, கல்வி அமைச்சு ஆகியவற்றின் நடவடிக்கைக்கு மட்டுமே உட்பட்ட விஷயமல்ல இது. தனிப்பட்டவர்களோ சமூக அமைப்புகளோ இதில் முக்கியப் பங்காற்ற வேண்டியது அத்தியாவசியமான ஒன்றாகும். சிறார் சித்திரவதைகள், சிறார் நலன் புறக்கணிக்கப்படும் விவகாரங்கள் தொடர்பில் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் தொடர்ந்து அயராது பாடுபடுவது குறித்து அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். அண்மையில் ஜோகூரில் நடந்த கொடுமையான சம்பவத்தை இதற்கு அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார். சிறு பிள்ளையொன்று முறையான பாதுகாப்பின்றி உண்ண உணவுமின்றி வீடொன்றில் நிராதரவாகத் தனித்து விட்டுச்செல்லப்பட்ட அந்தச் சம்பவத்தில் களமிறங்கி காரியமாற்றிய பொதுமக்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றார் அவர்.

இதுபோன்ற பொறுப்புணர்வும் கடப்பாடும் நமக்கு மிக அவசியம் தேவை. ஏதோ தவறான சம்பவம் நடக்கிறது என்பதை அறிய நேர்ந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பிற்கு அதுபற்றிய தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.

சமூக வலைத் தளங்களில் படம் பிடித்துக் காட்டுவதோடு நின்று விடாமல் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை மீட்கும் நடவடிக்கைகளில் துரிதமாக களமிறங்க வேண்டும். காணொளியை சரிபார்த்து அதனை வெட்டி ஒட்டி சீரமைக்கும் நடவடிக்கைகளில் நேரத்தைக் கடத்திக் கொண்டிருப்போமாயின், பாதிக்கப்பட்ட சிறுவர்களைச் சூழ்ந்த ஆபத்துகள் மேலும் மோசமடையும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். படமாக்கப்பட்ட காணொளி பதிவைக் காண்போரின் எண்ணிக்கை 10 பேர், 100 பேர் என்று  அதிகரிப்பதைக் காட்டிலும் பாதிக்கப்பட்ட சிறார்களின் பாதுகாப்பு மீதான உடனடி நடவடிக்கைகள் இன்றியமையாதவை என்பது உணரப்பட வேண்டும். இவ்வாறான தகவல்களை உரிய நடவடிக்கைக்குக் கொண்டு சேர்ப்பதில் சமூகத்தினர் ஒவ்வொருவருமே முக்கியப் பங்காற்ற வேண்டியது மிக அவசியமாகிறது.

சமூக நலத் துறையின் கீழ் 140 சிறார் பராமரிப்பு குழுக்கள், 133 சிறார் நலம் பேணும் குழுக்கள், 142 சிறார் நடவடிக்கை மையங்கள்  இந்தக் கண்காணிப்புகளுக்காகவும் உரிய நடவடிக்கைகளுக்காகவும் நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அதில் 5 சிறார் பராமரிப்பு குழுக்களும் 6 சிறார் நடவடிக்கை மையங்களும் கோலாலம்பூரில் இருக்கின்றன. நாடு முழுமையிலுமுள்ள கிராம பாதுகாப்பு மன்றங்களின் தலைவர்களையும் செயற்குழுவினரையும் இந்த நடவடிக்கைக் குழுவில் இணைக்க அமைச்சு எண்ணம் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள 15,000 இடங்களுக்கு இந்தத் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

மேலும் காவல்துறை, கல்வி அமைச்சின் ஒத்துழைப்புகளோடும் இந்த கண்காணிப்புகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப் பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். சிறு பிள்ளைகளின் உரிமைகள் குறித்து சிறப்பு பாதுகாப்புத் திட்டங்கள் ஒரே நேரத்தில் கோலாலம்பூரிலும் சிலாங்கூரிலும் 5 பள்ளிக்கூடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் மூலம் 87 மாணவர்களுக்கு இதுபற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.

உதவி தேவைப்படும் இக்கட்டான சூழ்நிலைகளில் சிறார்கள் தயங்காமல் தைரியத்தோடு இயங்க வேண்டும், தேவைப்படும் உதவிகளைப் பெற பிள்ளைகள் தாலியான் காசே எனப்படும் 15999 என்ற எண்ணுக்கு அழைத்து பேசலாம் அல்லது 019-2615999 என்ற எண்களில் புலனம் (வாட்ஸ்ஆப்) மூலம் 24 மணி நேரத்திலும் புகார் செய்யலாம் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

சிறார் நலன் பாதுகாக்கப்பட வேண்டிய விவகாரங்களில் அனைவரும் விழிப்போடு இயங்க  வேண்டும். சிறார் சார்ந்த சமூக பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தகுந்த தீர்வுகளைக் காண வேண்டும் என்பதோடு எப்போதுமே இது குறித்த விவகாரங்களில் விழிப்போடு இயங்க வேண்டியது முக்கியம். இனி வரும் காலங்களில் சிறார் சித்திரவதைகளைத் தடுக்கவும் அவர்களுக்கு நேரக்கூடிய துன்பங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் சமூகத்தினர் எப்போதும் விழிப்புணர்வோடு இயங்க வேண்டியது அதி முக்கியம் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here