கோலாலம்பூர்:
Jalan Perhentian Kampung Kovil Hilirயில் வசிப்பவர்களிடமிருந்து அவசர அழைப்பை பெற்ற பின்னர் போலீஸ் அதிகாரிகள், வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஒரு கடையில் மூன்று ஆண்களின் உடல்கள் கண்டுபிடித்தனர்.
கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜித் கூறுகையில், குறித்த வீட்டில் சண்டை நடப்பதாக இரவு 11 மணியளவில் தனது தரப்பிற்கு அழைப்பு வந்தது என்றும், உடனே ரோந்து கார் குழுவினர் இரண்டாவது மாடியில் இருந்த வீட்டிற்கு சென்றனர். எவ்வாறாயினும், சண்டையில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களும் அவ்விடத்தை விட்டு தப்பி ஓடினர் என்றார் அவர்.
மேலும் சோதனையில், 20 முதல் 30 வயதுடைய மூன்று இலங்கை ஆடவர்களின் சடலங்கள் ஸ்டோர் ரூமில் (பொருட்கள் பாதுகாக்கும் அறை) ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒரு உடல் ஆடையின்றி இருந்தது என்று அவர் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மூன்று உடல்களும் சந்தேக நபரால் கட்டப்பட்டிருந்ததாகவும் தலைகள் பிளாஸ்டிக்கால் மூடப்பட்டதாகவும் அவர் கூறினார். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் பலியானவர்களில் ஒருவர் சம்பந்தப்பட்ட தம்பதியின் மகன் என்பது கண்டறியப்பட்டது என்று அலாவுதீன் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், தம்பதியினர் கடைசியாக முந்தைய நாள் தங்கள் மகனைப் பார்த்தது கண்டறியப்பட்டது. மேலும் போலீசார் முன்னிலையில்தான் அவர்கள் கதறி அழுதனர் என்று அவர் கூறினார். சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணத்தை அடையாளம் காண்பதுடன் தொடர்புடைய இரண்டு இலங்கை சந்தேக நபர்கள் மீதான விசாரணைகள் நடைபெற்று வருவதாக அலாவுதீன் மேலும் கூறினார்.
சந்தேக நபருக்கு தம்பதியினருடன் எந்த குடும்ப சொந்தமும் இல்லை. ஆனால் அவர்கள் கடந்த ஆறு மாதங்களாக ஒருவரையொருவர் அறிந்திருக்கிறார்கள். மேலும் சந்தேக நபர் சிலாங்கூர் கிள்ளானில் இருந்து இரண்டு நாட்கள் வீட்டில் தங்குவதற்காக அவர்களின் வீட்டிற்கு வந்துள்ளார் என்று அவர் கூறினார்.
இச்சம்பவம் “சந்தேகநபர்களால் திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்று போலீசார் கருதுகின்றனர்” என அவர் மேலும் கூறினார்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தியையும் போலீசார் கைப்பற்றினர். மூன்று உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. விசாரணைக்கு உதவுவதற்காக இறந்தவரின் பெற்றோர் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இப்போது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் படி நடவடிக்கைக்காக ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.




















