இந்தியா – கனடா முரண்பாடு; பஞ்சாப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சம்

சீக்கிய பிரிவினைவாதியின் கொலை தொடர்பாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள கசப்பு, வட அமெரிக்காவில் தங்கள் வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தை பஞ்சாப்பில் வசிக்கும் சீக்கியர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு முன்பு வட பஞ்சாப்பிலிருந்து கனடாவில் குடியேறிய ஹர்தீப் சிங் நிஜ்ஜார், ஜூன் மாதம் வான்கூவர் புறநகரில் உள்ள கோவிலுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். அங்கு அவர் அங்கு வாழும் சீக்கியர்களின் பிரிவினைவாத தலைவராகச் செயல்பட்டு வந்தார்.

இந்தக் கொகையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த வாரம் கூறினார்.

2020ல் நிஜ்ஜாரை “பயங்கரவாதி” என்று முத்திரை குத்திய இந்தியா, ட்ரூடோவின் குற்றச்சாட்டை “அபத்தமானது” என்று கோபத்துடன் நிராகரித்தது.

தொடர் நடவடிக்கையாக இந்தியாவில் இருந்த கனேடிய உளவுத்துறையின் தலைவரை வெளியேற்றியது, பயண எச்சரிக்கைகளை விடுத்தது, கனேடியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியது, இந்தியாவில் கனடாவின் அரசதந்திரிகளின் எண்ணிக்கையையும் குறைத்தது.

இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களில் சீக்கியர்கள் இரண்டு விழுக்காட்டினர்தான். எனினும், 500 ஆண்டுகளுக்கு முன்னர் சீக்கிய மதம் தோன்றிய பஞ்சாப் மாநிலத்தின் 30 மில்லியன் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் சீக்கியர். பஞ்சாப்பிற்கு வெளியே கனடாவில் அதிக எண்ணிக்கையிலான சீக்கியர்கள் வாழ்கின்றனர்.

1980, 1990களில் பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிர்களைப் பலிவாங்கிய சீக்கியர்களின் காலிஸ்தான் தனிநாடு போராட்டத்தை இந்தியா நசுக்கிவிட்டது. என்றாலும் அது முற்றாக அடங்கிவிடவில்லை.

பஞ்சாப்பின் பர்சிங்புரா கிராமத்தில் வசிக்கும் நிஜ்ஜாரின் மாமா, ஹிம்மத் சிங் நிஜ்ஜார், 79, இப்பிரச்சினையால் கனடாவுடனான அரசதந்திர உறவுகள் மோசமடைந்து வருவதையும், பஞ்சாப்பில் பொருளியல் வாய்ப்புகள் குறைந்து வருவதையும் பற்றி தான் கவலைப்படுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

ஒரு காலத்தில் இந்தியாவின் வளமான மாநிலமாக இருந்த பஞ்சாப்பில் கடந்த இருபது ஆண்டுகளில் உற்பத்தி, சேவைகள், தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் மாநிலங்கள் முந்திவிட்டன.

“இப்போது ஒவ்வொரு குடும்பமும் தனது மகன்களையும் மகள்களையும் கனடாவுக்கு அனுப்ப விரும்புகிறது, விவசாயம் லாபகரமானதாக இல்லை,” என்று நிஜ்ஜார் கூறினார்.

இந்தியாவின் விளைநிலமாக இருந்த பாஞ்சாப்பில் தற்போது விவசாயம் லாபகரமானதாக இல்லை என்று நிஜ்ஜார் கூறினார். 

கனடாவின் அனைத்துலக மாணவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். கடந்த ஆண்டு அவர்களின் எண்ணிக்கை 47% அதிகரித்து 320,000 ஆக உள்ளது.

கனடாவுக்குச் செல்ல விரும்பும் இளநிலைப் பட்டதாரி குர்சிம்ரன் சிங், 19, “கனடா மாணவர் விசாவை வழங்குமா அல்லது இந்திய அரசாங்கம் சில தடைகளை விதிக்குமா என்று இப்போது அஞ்சுகிறோம்,” என்றார்.

சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் அவர் பேசுகையில், அங்கு பல மாணவர்கள் பிரார்த்தனை செய்ய அல்லது மாணவர் விசாக்களுக்கு நன்றி தெரிவிக்கச் செல்கிறார்கள்.

மோடி அரசாங்கம் குறிப்பாக இளைஞர்களுக்கு “அச்சமான சூழலை” உருவாக்கியுள்ளது என்று நிஜ்ஜார் கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் சிங், 31, கூறினார்.

பஞ்சாப்பில் சுதந்திரத்துக்கு ஆதரவு அலை இல்லை என்றும், இதுபோன்ற கோரிக்கைகள் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் என்றும் பாஜக மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் சீக்கியர்களுக்கு மோடி செய்தது போல் யாரும் செய்யவில்லை என்றும் அக்கட்சி கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here