2024 பட்ஜெட் போர்ட்டல் வழி 10,000 பரிந்துரைகள்

புக்கிட் மெர்தாஜம்:

2024 பட்ஜெட் போர்ட்டல் வழி நிதி அமைச்சு பொதுமக்களிடம் இருந்து 10 ஆயிரம் பரிந்துரைகளைப் பெற்றிருக்கிறது என்று அதன் துணை நிதி அமைச்சர் (2) ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்தார்.அதே சமயம் நாடு முழுவதும் நடத்தப்பட்ட நேர்முகச் சந்திப்புகளில் 8 ஆயிரம் பேர் கலந்து கொண்டிருக்கின்றனர். மாநிலங்கள், பல்வேறு தொழில்துறைகள், அமைச்சுகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

நாடு முழுவதும் நடத்தப்பட்டு வந்த நேர்முகச் சந்திப்புகள் நிறைவு  பெற்றிருக் கின்றன. பொதுமக்களிடம் இருந்து பல்வேறு பரிந்துரைகள் பெறப்பட்டிருக்கின்றன. இவை யாவும் ஒருங்கிணைக்கப்பட்டு தொகுக்கப்பட்டு 2024 பட்ஜெட்டில் சேர்ப்பது பற்றி பரிசீலிக்கப்படும். வரும் அக்டோபர் 13ஆம் தேதி பிரதமரும் நிதி அமைச் சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டின் 2024 பட்ஜெட்டை  நாடாளுமன்ற மக்களவையில் சமர்ப்பிப்பார் என்று அவர் கூறினார்.

அனைத்து விவரங்களும் மனவோட்டங்களும் பரிந்துரைகளும் விரிவாக ஆய்வு செய் யப்பட்டு வருகின்றன. ஒவ்வொன்றையும் உரிய வகையில் மதிப்பிட்டு வருகி றோம். நிதி அமைச்சு பட்ஜெட் தயாரிப்பு இறுதிக் கட்டத்தில் இருக்கிறது என்று புக்கிட் மெர் தாஜம் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.இங்கு தம்முடைய நாடாளுமன்ற சேவை மையத்தில் புக்கிட் மெர்தாஜம் ரஹ்மா விற்பனையின்போது செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

2024 பட்ஜெட் மக்கள் நலனில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. நடப்பு உதவித் திட்டங்களை இன்னும் மேம்படுத்துவது உட்பட தேசியக் கட்டமைப்பு மேம்பாட்டிலும் அதீத அக்கறை காட்டப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.

இவ்வாண்டு முழுவதும் சமையல் எண்ணெய், முட்டை, கோழி உட்பட பல்வேறு உதவித் தொகைகளுக்காக மொத்தம் 66 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மேலாக மக்களின் வாழ்வாதாரச் சுமைகளைக் குறைப்பதற்கும் அரசாங்கம் ரஹ்மா விற்பனைகளுக்காக கூடுதலாக 150 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கி இருக்கிறது என்றார் அவர்.

இந்த ஒதுக்கீட்டின் மூலம் அத்தியாவசியப்   பொருட்களின் விலையை 10 முதல் 30 விழுக்காடு வரை குறைப்பதற்கு வகை செய்யப்பட்டிருக்கிறது. எஸ்டிஆர் எனப்படும்  ரஹ்மா உதவித் திட்டத்தின் கீழ் ரொக்க உதவித் தொகை வழங்குவதற்கு அரசாங்கம் 8 பில்லியன் ரிங்கிட்டை வழங்கி இருக்கிறது.குறுகிய காலத்திற்கு மக்களின் சுமையைக் குறைப்பதற்கு இந்த உதவித் திட்டங்களும் நலத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று ஸ்டீவன் சிம் கூறினார்.

புக்கிட் மெர்தாஜம் நாடாளுமன்ற உறுப்பினரின் சேவை மையத்தில்  நடைபெற்ற ரஹ்மா விற்பனையில் 22 அத்தியாவசியப் பொருட்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றுள் அரிசி, சீனி, மாவு, முட்டை, சமையல் எண்ணெய் ஆகியவையும் அடங்கும்.

இங்கு ஒவ்வொரு பொருளும் சந்தை விலையைக் காட்டிலும் 10 முதல் 30 விழுக்காடு வரை மலிவாக இருந்தது. காலை 8.00 மணிக்குத் தொடங்கிய இந்த ரஹ்மா விற்பனைக்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வருகை தந்து வேண்டிய பொருட்களை சகாய விலையில் வாங்கிச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here