போபால்:
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 12 வயதுச் சிறுமி, ரத்தம் சொட்டச் சொட்ட, அரைநிர்வாணத்துடன் வீடு வீடாகச் சென்று கெஞ்சியும் ஒருவரும் உதவிசெய்ய முன்வரவில்லை.
சந்திரனை ஆய்வுசெய்ய செயற்கைகோள் அனுப்பிய இந்தியாவில் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமிக்கு உதவக்கூட முடியாத, வேடிக்கை பார்க்கும் சமூகமும் அங்கு இருக்கிறது என எண்ணும்போது மனம் வேதனையடைகிறது.
இச்சம்பவம் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைன் மாவட்டத்தில் நடந்தது.
அச்சம்பவம் குறித்த காணொளி இணையத்தில் வலம் வருகிறது. அச்சிறுமி வீடு வீடாகச் சென்று உதவி கேட்டும் ஒருவரும் கைகொடுக்க முன்வராமல் துரத்தியடித்ததைக் கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காணொளி காட்டுகிறது.
எப்படியோ ஓர் ஆசிரமத்தை அடைந்த அச்சிறுமியைக் கண்டதும் அங்கிருந்த ஒருவர் துண்டால் அவரைப் போர்த்தி, மாவட்ட மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவச் சோதனையில் அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதிப்படுத்தப்பட்டது.
கடுமையான காயங்கள் ஏற்பட்டிருந்ததால் பின்னர் அவள் இந்தூர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டாள். அவளுக்குக் காவல்துறையினர் ரத்த நன்கொடை அளித்தனர். அவளது உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்பட்டது.
காவல்துறை அவளது பெயர், முகவரியைக் கேட்டபோது, அவளால் தெளிவாகப் பதில்கூற இயலவில்லை என்றும் சொல்லப்பட்டது.
ஆயினும், அவளது உச்சரிப்பைப் பார்க்கும்போது அவள் உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவளாக இருக்கலாம் என்று உஜ்ஜைன் காவல்துறைத் தலைவர் சச்சின் சர்மா கூறினார்.
இதன் தொடர்பில் உ.பி. மாநிலக் காவல்துறையையும் ம.பி. காவல்துறை தொடர்புகொண்டுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.
“இந்த வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் துப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்,” என்று உஜ்ஜைனி நகரின் காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.பி.சச்சின் சர்மா கூறியுள்ளார்.
“இந்தச் சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. குற்றவாளிகள் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான கமல்நாத்.