குறைந்த பட்ச சம்பளம் வெள்ளி 1500 ஆல் தள்ளிப்போகும் கல்யாணங்கள்.

இந்நாட்டிலுள்ள தொழிலாளர்களுள் பெரும் பகுதியினர் குறைந்த சம்பளத்தையே பெறுகின்றனர் என்பதைச் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட ஆய்வறிக்கை தெளிவாக விவரித்திருக்கிறது. 2023 முதல் காலாண்டுக்கான காலகட்டத்தில் தொழிலாளர்கள் பெறக்கூடிய சம்பளம் மிகக் குறைவாக இருப்பதைப் புள்ளி விவர அறிக்கை காட்டியிருக்கின்றது.

அதிகாரப் பூர்வத் துறைகளில் வேலை செய்யும் 6.46 மில்லியன் தொழிலாளர்களுள் கிட்டத்தட்ட 82 விழுக்காட்டினர் மாதம் 5 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் குறைவாகவே சம்பளம் பெறுகின்றனர்.எஞ்சிய 35 விழுக்காட்டினர் மாதம் 2 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் கீழ் சம்பளம் பெறுவதை அந்தப் புள்ளிவிவர அறிக்கை காட்டியிருக்கிறது. இது குறித்து பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லியும் கவலை தெரிவித்திருக்கின்றார்.

சம்பளத்தை நிர்ணயிக்கும் விஷயத்தில் தலையிடக்கூடிய ஒரு தீர்க்கமான கொள்கை
இல்லாவிடில் தற்போது இருக்கக்கூடிய 1,500 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பளத்துடன் பெரிய வேறுபாடு எதுவும் இல்லாத தொடக்கச் சம்பளமே நீடிக்கும் நிலை வரலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பட்டதாரிகளுக்கான சம்பளம் மற்றும் அவர்களின் தொடக்கச் சம்பளத்தின்  விழுக்காடு தற்போதைய சுழ்நிலையில் அதிகமாக இருக்க வேண்டும். அதாவது குறைந்தபட்ச சம்பள விகிதத்துடன் ஒப்பிடுகையில் பட்டதாரிகளுக்கான தொடக்கச் சம்பளம் அதிகமாக இருக்க வேண்டும். தொழில்திறன் இல்லாத தொழிலாளர்களுக்குத்தான் குறைந்தபட்ச சம்பளமாக 1,500 ரிங்கிட் வழங்கப்படுகிறது.

இது சட்டரீதியாக நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆனால் அதேசமயம் புள்ளி விவரங்கள் அடிப்படையில் பார்த்தால் தொழில்திறன் பெற்ற தொழிலாளர்களின் சம்பளமும் கிட்டத்தட்ட இந்தக் குறைந்தபட்ச சம்பளத்துடன்தான் அமைந்திருப்பதைக் காண முடிகிறது. பட்டதாரிகளுக்கும் தொழில்திறன் பெற்ற இளம் தொழிலாளர்க ளுக்கும் இந்தக் குறைந்த பட்ச சம்பள விகித அடிப்படையில் தான் சம்பளம் நிர்ணயிக் கப்படுவதைக் காண முடிகிறது.

நிலைமை மாற வேண்டும். சம்பள விகித அடிப்படையில் நீடிக்கும் நடப்பு நிலவரம் தொடரக்கூடாது. இதனைச் சரிசெய்வதற்கு உடனடியாக ஒரு தீர்க்கமான கொள்கை நாட்டிற்குத் தேவைப்படுகிறது என்பதையும் ரஃபிஸி குறிப்பிட்டிருக்கின்றார், சம்பளப் பிரச்சினை இருப்பது உண்மைதான். இது வெறும் பேச்சு மட்டுமல்ல. ஆனால் 6 மில்லியனுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகள் இதனை உறுதி செய்திருக்கின்றன. இந்தச் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஆழமான பேச்சுகள் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியிருக்கின்றார்.

நாட்டில் முற்போக்குச் சம்பளக் கொள்கையைக் கொண்டுவருவது பற்றிய பரிந்துரை முன்வைக்கப்பட்டு அது விவாதிக்கப்பட்டும் வருகிறது. குறிப்பிட்ட நாடுகளுக்கு ஏற்ப வெவ்வேறு சம்பள நடைமுறைகள் அமலில் உள்ளன. ஆகவே முற்போக்குச் சம்பளக் கொள்கை பற்றி முதலாளிகளும் தங்கள் தரப்பு கருத்துகளை முன்வைத்திருக்கின்றனர். இதற்கு முன்பு அரசு சேவைத்துறை தொழிலாளர்களுக்கான சம்பளத்தை அரசாங்கம் உயர்த்தி இருக்கின்றது.

ஆனால் தற்போது எந்தக் கொள்கையும் இல்லாத நிலையில் தனியார் துறை இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகத் தெரியவில்லை. மலேசியாவில் ஏற்கெனவே குறைந்தபட்ச சம்பள நடைமுறை உள்ளது. ஆனால் அதற்கு மாற்றாக முற்போக்குச் சம்பள நடைமுறை கொண்டுவரப்படுமா என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டுமானால் நாட்டில் முற்போக்குச் சம்பள நடைமுறை கொண்டுவரப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.

நம் நாட்டைப் பொறுத்தவரையில் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை நிர்ணயிப்பதில் குறைந்தபட்ச சம்பள நடைமுறையைப் பயன்படுத்துவதில் தான் முதலாளிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்று மனிதவள அமைச்சின் தொழிலாளர் பொருளா தார பிரிவுத் தலைவர்  இணைப் பேராசிரியர் முகமட் யூசோப் சாரி குறிப்பிட்டிருக்கின்றார். உதாரணத்திற்கு இன்று தொழிலாளர்களுக்கு 1,500 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பளம் வழங்கப்படுகிறது. அடுத்தாண்டும் இதே 1,500 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பளம் நீடிக்கின்ற நிலையில், அதற்கடுத்த ஆண்டும் இதே 1,500 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பளம் தொடர்ந்தால் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் எப்படி உயரும்?

குறைந்தபட்ச சம்பள விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டால் தவிர தொழிலாளர்களின் சம்பள விகிதத்தில் பெரிய அளவில் மாற்றத்தை எதிர்பார்க்கவும் முடியாது. இந்நிலை மாற வேண்டுமானால் இந்த ஆண்டு 1,500 ரிங்கிட்டாக இருக்கும் குறைந்தபட்ச சம்பளம் அடுத்தாண்டு 1,700 ரிங்கிட்டாக உயர வேண்டும். அதற்கடுத்த ஆண்டு இதே தொகை 2,000 ரிங்கிட்டாக உயர வேண்டும். தொழிலாளர்களின் சம்பள விகிதம் இப்படி அமைந்தால்தான் அது முற்போக்குச் சம்பள விகிதம் எனப் பொருள்படும் என்று அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், புத்ராஜெயாவில் நடைபெற்ற தொழிலாளர் தினத்தை முன்னிட்டு உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், குறைந்த பட்ச சம்பள அமலாக்கம் தொடர்பான பிரச்சினை அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என்றார். இப்பிரச்சினை சிக்கல் நிறைந்தது. மிகவும் சிரமமானது என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார். அனைவருக்கும் நன்மை தரக்கூடிய வகையில் ஒரு தீர்வு பிறக்க வேண்டும் என்றார் அவர். ஏற்கெனவே 5 தொழிலாளர்களுக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்டிருக்கும் முதலாளிகள் 1,500 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பளத்தை வழங்குவதை ஒத்திவைப்பதற்கு கடந்த டிசம்பர் மாதம் அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது.

இந்த முதலாளிகள் அடுத்தாண்டு ஜூலை முதல் தேதி வரை இந்தக் குறைந்தபட்ச சம்பளத்தை அமல்படுத்துவதை ஒத்திவைக்கலாம் எனவும் அரசாங்கம் கூறியிருக்கின்றது. வாழ்க்கைச் செலவினம் பலமடங்கு உயர்ந்துவிட்ட நிலையில் 1,500 ரிங்கிட் மாதச் சம்பளத்தில் குடும்பச் செலவுகளை எப்படிச் சமாளிக்க முடியும் என்ற கேள்வி தான் பெரும்பாலான தொழிலாளர்கள் மனத்தில் எதிரொலித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க, மாதம் 1,500 ரிங்கிட் சம்பளத்தைப் பெறக்கூடிய ஆண்களைத் திருமணம் செய்துகொள்ள பெண்கள் தயங்கு வதாகவும் ஊடகத்தில் செய்தி வெளியாகி இருக்கின்றது.

1,500 ரிங்கிட் சம்பளம் என்பதெல்லாம் கணவன், மனைவிக்கே இப்போது போதாது. பிள்ளைகள் என்று வந்துவிட்டால் இத்தொகையில் எப்படிச் சமாளிக்க முடியும் என்ற கேள்வியைப் பலர் எழுப்புகின்றனர். நான் தனி ஆளாக இருக்கின்றேன். மாத வருமானம் 1,500 ரிங்கிட் போதவில்லை. இந்நிலையில் ஒருவர் திருமணம் செய்து கொண்டால் இச்சம்பளத்தில் இருவருக்கு வயிறார உணவு கொடுக்க முடியுமா என்று ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கின்றார். தற்போதைய நிலையில் 1,500 ரிங்கிட் சம்பளம் நிச்சயம் ஒரு குடும்பத்திற்குக் கட்டுப்படி ஆகாது. இதனால்தான் பெண்களுள் பலர் 1,500 ரிங்கிட் மாதச் சம்பளம் பெறக்கூடிய ஆண்களைத் திருமணம் செய்துகொள்ளத் தயங்குகின்றனர் என்று நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ஒருவேளை இந்தக் குறைந்த சம்பளத்தைப் பெறக்கூடிய ஆண்கள் பகுதிநேரமாக வேலை செய்து கூடுதல் வருமானத்தைப் பெற்றால் அவர்களால் குடும்பச் செலவுகளை ஓரளவு சமாளிக்க முடியும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

Exclisive Article by: Mr. Malaiyandy (Chief Editor)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here