கோலாக் கெட்டிலில் முதியவரை கொலை செய்ததாக நான்கு இந்தியர்கள் மீது குற்றச்சாட்டு

பாலிங்:

இந்த மாத தொடக்கத்தில் இங்குள்ள கோலாக் கெட்டில் என்ற இடத்தில் முதியவரைக் கொலை செய்ததாக நான்கு இந்தியர்கள் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

கே.தமிழ்செல்வம், 25; சி.விக்ரரன், 33; சரிம் ஓமர், 33; மற்றும் எஸ்.சுரேஷ்குமார், 21, ஆகியோருக்கு எதிரான குற்றச்ச்சாட்டு நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் தமிழில் வாசிக்கப்பட்டபோது, அது புரிந்ததாக அவர்கள் தலையசைத்தனர்.

எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பின் கீழ் வருவதால் நீதிபதி நஜ்வா சே மாட் முன்நிலையில் எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை.

இவர்கள் அனைவரும் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 4.20 மணி வரை கோலாக் கெட்டிலில் உள்ள எண் 170, லோரோங் பிடாரா 4, தாமான் டேசா பிடாரா என்ற வீட்டில் எஸ்.கண்ணன், 71, என்பவரை கூட்டாக கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ், மரண தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்குக் குறையாத, மற்றும் 40 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை, 12 க்குக் குறையாத சாட்டையடி ஆகியவற்றை விதிக்கக்கூடிய அதே சட்டத்தின் பிரிவு 34 உடன் சேர்த்துப் படிக்கப்பட்டது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. வழக்கை மீண்டும் செவிமடுக்க நீதிமன்றம் டிசம்பர் 14 ஆம் தேதியை நிர்ணயித்துள்ளது.

கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் கழுத்தை நெரித்த அடையாளங்களுடன் பாதிக்கப்பட்டவர் தனது வீட்டில் சுயநினைவின்றி காணப்பட்டதாக ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here