ஜோகூரின் இரு சோதனைச்சாவடிகளிலுள்ள நெரிசலைக் கையாள சுமார் 168.7 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

ஜோகூர்:

ஜோகூரின் இரு நில சோதனைச்சாவடிகள் போக்குவரத்து நெரிசலைக் கையாள, 168.7 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்புள்ள திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோஃப் தெரிவித்துள்ளார்.

பெங்குனான் சுல்தான் இஸ்கண்டார் சோதனைச்சாவடியிலும், சுல்தான் அபு பக்கர் காம்பிளெக்ஸ் சோதனைச்சாவடியிலும் 44 மோட்டார்சைக்கிள் தடங்களைச் சேர்க்கும் பணியும் அத்திட்டங்களில் அடங்கும். அப்பணிகளுக்கு ஏறக்குறைய 61.7 மில்லியன் ரிங்கிட் செலவாகும்.

“கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி எல்லை மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இரு சோதனைச்சாவடிகள் வழியாக 71 மில்லியன் பேர் சென்றதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன,” என்றார் ஃபடில்லா.

“செப்டம்பர் நிலவரப்படி, இவ்வாண்டு ஏறத்தாழ 98 மில்லியன் பேர் இரு சோதனைச்சாவடிகளைப் பயன்படுத்தினர். ஆண்டிறுதிக்குள் இந்த எண்ணிக்கை 136 மில்லியனை எட்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் சொன்னார்.

இரு சோதனைச்சாவடிகளிலும் நெரிசலைக் கையாள சிறப்புக் குழுவுடனான சந்திப்புக்கு அவர் புதன்கிழமை தலைமை தாங்கினார்.

நெரிசலை எதிர்கொள்ள 21 நடவடிக்கைகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஃபடில்லா கூறினார். அவற்றில் 15 நடவடிக்கைகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன. எஞ்சியவற்றுக்கான பணி தொடர்கிறது.

“தற்போதைய, எதிர்கால தேவைகளைப் பார்க்கையில், கூடுதலான மோட்டார்சைக்கிள் தடங்களை அமைப்பதற்கும் கடற்பாலத்தில் கூரையுடன் கூடிய நடைபாதையை அமைப்பதற்கும் மேலும் நான்கு திட்டங்களைச் சேர்க்க சிறப்புக் குழு முடிவெடுத்துள்ளது.

சந்திப்புக்கு முன்பு, உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுஷன் இஸ்மாயில், பொதுப் பணித்துறை அமைச்சர் அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி, ஜோகூர் மந்திரி பெசார் ஓன் ஹாஃபிஸ் காஸி ஆகியோரும் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளும் பாதசாரிகள் மற்றும் வாகனங்களுக்கான குடிநுழைவுப் பகுதிக்குச் சென்று நிலவரத்தைப் பார்வையிட்டனர்.

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே நுழைவுப் பகுதிகளில் நெரிசலைக் குறைக்க, மலேசிய மோட்டார்சைக்கிளோட்டிகளுக்கான தானியக்க குடிநுழைவு முறை 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here