மொத்தம் 6000 பேர்.. கணக்கு சொன்ன ஹமாஸ்

காசா: கடந்த 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர், பிணை கைதிகளாக இஸ்ரேலியர்கள் சிலரை பிடித்து சென்றனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், பிணை கைதிகளை விடுவிக்க வேண்டும் எனில், இஸ்ரேலிய சிறையில் உள்ள 6000 பாலஸ்தீனர்களை விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும்.

ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது. மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்தான் பலமான நாடு என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், இந்த ஏவுகணை தாக்குதல் அந்நாட்டின் ஆத்திரத்தை அதிகமாக தூண்டியது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அதேபோல பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் பெண்களையும், குழந்தைகளையும், ராணுவ வீரர்களையும் பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். இந்த கைதிகளை வைத்துதான் தற்போது இஸ்ரேலுக்கு, ஹமாஸ் போக்கு காட்டி வருகிறது.

ஹமாஸின் இந்த பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன் தொடங்கி பெரும்பாலான மேற்கு நாடுகள் கண்டித்திருக்கின்றன. மறுபுறம் இஸ்ரேல், காசா மீது அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது. கடந்த 10 நாட்களாக வான்வழி தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் தற்போது தரை வழியாக ஊடுருவ முயன்று வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் தங்கள் நாட்டை சேர்ந்த சில பிணை கைதிகளை மீட்டிருக்கின்றனர். இருப்பினும் இன்னும் அதிகமான பிணை கைதிகளை இஸ்ரேல் மீட்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில், தற்போது ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிய பிணை கைதிகளை விடுவிக்க வேண்டும் எனில் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதாவது இஸ்ரேலிய சிறையில் இருக்கும் 6000க்கும் அதிகமான பாலஸ்தீனர்களை விடுதலை செய்தால்தான், பிணை கைதிகளை விடுவிக்க முடியும் என்று கூறியுள்ளனர். ஹமாஸின் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளின் தலைவரான டாக்டர்.பாசெம் நைம் கூறுகையில், “இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராகதான் நாங்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறோம். அவர்களின் ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட்டவுடன் பிணை கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். அதேபோல 6000 பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலிய சிறையில் இருக்கிறார்கள். அவர்களும் விடுவிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

வான்வழி தாக்குதல் மூலம் காசாவை இஸ்ரேல் கடுமையாக தாக்கியுள்ளது. இப்போது தரை வழியாக ஊடுருவி தங்கள் நாட்டின் பிணை கைதிகளை மீட்பது மட்டுமே ஒரேவழி. ஆனால் அது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இந்நிலையில ஹமாஸ் இப்படி ஒரு கோரிக்கையை வைத்திருப்பது இஸ்ரேலிய ராணுவத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் ஒருவேளை தரை வழியாக ஊடுருவும் மிஷன் ஃபெயிலாகி விட்டால் ஹமாஸிடம் இருக்கும் இஸ்ரேலிய பிணை கைதிகள் கொல்லப்படவும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here