காசா போர் எதிரொலி… இஸ்ரேல் உடனான உறவை துண்டித்தது பஹ்ரைன்

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டிக்கும் வகையில், இஸ்ரேல் உடனான உறவை துண்டித்துக்கொள்வதாக பஹ்ரைன் அறிவித்துள்ளது.

இன அழிப்புக்கு இணையான போர்த் தாக்குதலை காசாவில் மேற்கொண்டு வரும் இஸ்ரேலுக்கு எதிராக, மத்திய கிழக்கில் பதற்றம் தொற்றியுள்ளது. ஆபிரகாம் உடன்படிக்கை என்பதன் கீழ் இஸ்ரேலுடன் உறவைப் புதுப்பித்திருந்த அரபு நாடுகள் பலவும் அதனை மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளன.

அக்.7 அன்று இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் ஆயுதக் குழுக்கள் ஆயிரத்துக்கும் மேலானவர்களை கொன்று குவித்து, 200க்கும் மேலானோரை கடத்திச் சென்றது. அன்று தொடங்கி ஹாமஸுக்கு எதிரான பலகட்டப் போர்த் தாக்குதல்களை இஸ்ரேல் முன்னெடுத்து வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக்கி குடியிருப்பு பகுதிகளில் ஒளிந்திருப்பதாக, அவை மீதான தனது தொடர் குண்டுவீச்சுகளுக்கு இஸ்ரேல் நியாயம் கற்பித்து வருகிறது.

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலின் 1400 பேர் பலியாக, இஸ்ரேலின் பதிலடித் தாக்குதல் காரணமாக காசாவில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தொடுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலின் இந்த போக்கினை கண்டிக்கும் வகையில் உலக நாடுகள் பலவும் அந்நாட்டுடனான உறவைத் துண்டிக்க முன்வந்துள்ளன.

இஸ்ரேலுக்கான தனது தூதரை திரும்ப அழைத்ததாக ஜோர்டான் கூறிய ஒரு நாள் கழித்து, இஸ்ரேலுடனான உறவுகளை துண்டித்துக் கொள்வதாக பஹ்ரைனும் அறிவித்துள்ளது. பரஸ்பரம் இரு நாடுகளின் தூதர்களும் தங்கள் தாய் நாட்டு தற்போது திரும்பியுள்ளனர். முன்னதாக பொலிவியா தேசம் இஸ்ரேலுடனான உத்தியோகபூர்வ உறவுகளை துண்டித்துக்கொள்வதாக அறிவித்தது. சிலி மற்றும் கொலம்பியாவும், இஸ்ரேலுக்கான தங்கள் தூதர்களை ஆலோசனைக்காக திரும்ப அழைப்பதாக தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here