பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; சிலாங்கூரில் குறைகிறது

கோலாலம்பூர்:

சிலாங்கூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிலைமை தொடர்ந்து சீரடைந்து வரும் நிலையில், பேராக்கில் வெள்ளம் காரணமாக நேற்று மாலை அதிகமான மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

பேராக்கில், நேற்று காலை 145 குடும்பங்களைச் சேர்ந்த 470 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம் அடைந்திருந்த நிலையில், நேற்று இரவு 9 மணி நிலவரப்படி அங்குள்ள ஐந்து நிவாரண மையங்களில் 151 குடும்பங்களைச் சேர்ந்த 488 பேராக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்று, பேராக் பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்துள்ளது.

சங்காட் ஜாங்கில் உள்ள சுங்கை பிடோரின் நீர்மட்டம் 4.17 மீட்டர் அளவிலும், வீர் தஞ்சோங் துவாலாங்கில் உள்ள சுங்கை கிண்டாவில் 13.11 மீட்டர் அளவிலும் நீர் மட்டம் அபாய நிலையில் இருப்பதாகவும் மாநில வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் சிலாங்கூரில் நேற்று காலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட186 குடும்பங்களைச் சேர்ந்த 740 ஆக இருந்த நிலையில், இன்று 180 குடும்பங்களை சேர்ந்த 702 பேராகக் குறைந்துள்ளது.

இதற்கிடையில், வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் அடிப்படையில், ஏழு மாநிலங்களின் பல பகுதிகளில் நவம்பர் 11 ஆம் தேதி அதிகாலை 1 மணி வரை பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here