ஷா ஆலாம்:
ஷா ஆலாமின் செக்சன் 27 இல் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் நேற்று (நவம்பர் 9) அதிகாலை ஜோக்கிங் சென்றபோது ஒரு திருடனுடன் சண்டையிட்டதில் ஆடவர் ஒருவர் காயமடைந்தார்.
பாதிக்கப்பட்ட 30 வயதானவர், நேற்று அதிகாலை 5.50 மணியளவில் வெளிப்புறத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அவரை அணுகினார் என்று ஷா ஆலம் மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் முஹமட் இக்பால் இப்ராஹிம் இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 10) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
பின்னர் “சந்தேக நபர் கத்தியைக் காட்டி, பாதிக்கப்பட்டவரின் பையைப் பறிக்க முயன்றார்.
“இருப்பினும், பாதிக்கப்பட்டவர் சந்தேக நபருடன் போராடினார், இதன்போது சந்தேக நபரால் அவர் காயமடைந்தார்,” என்று அவர் கூறினார்.
இச்சம்பவத்தில் சந்தேகநபரின் திருட்டு வெற்றிபெறாததால் இழப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறிய ACP முஹமட் இக்பால், காயமடைந்த பாதிக்கப்பட்டவர் ஷா ஆலாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்றும் அவரது சகோதரி வியாழன் இரவு போலீஸில் புகார் அளித்தார் என்றார்.
“சந்தேக நபரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அத்தோடு இந்தப்பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் நடப்பது இதுவே முதல் முறை” என்று அவர் மேலும் கூறினார்.



















