காஸாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அடியில் ஹமாஸ் அமைப்பின் சுரங்கப் பாதை கண்டுபிடிப்பு: இஸ்ரேல்

காஸா அல்-ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் போராளிகள் பயன்படுத்திய சுரங்கத்தை தனது வீரர்கள் கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

காஸாவின் மிகப்பெரிய அல்-ஷிஃபா மருத்துவமனையின் வெளிப்புறத்தில் ஒரு சுரங்கப் பாதையின் வாயிலைக் காட்டும் காணொளியை இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்டுள்ளது.

ஆனால் இந்தக் காணொளியை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.

தரையில் இருந்த ஆழமான பாதையை கான்கிரீட் பாளங்கள், துண்டு மரங்கள், ரப்பர் மற்றும் மணலால் மூடப்பட்டிருந்தது. அந்தப் பகுதி தோண்டப்பட்டது போல இருந்தது. அருகில் ஒரு ‘புல்டோசர்’ காணப்பட்டது.

ஏராளமான ஆயுதங்கள் ஏற்றப்பட்ட வாகனத்தையும் மருத்துவமனையில் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.

நேற்று பிற்பகுதியில் ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், அல்-ஷிஃபாவை ராணுவ நடவடிக்கைகளுக்காக தங்களுடைய அமைப்பு பயன்படுத்துவதாக அமெரிக்காவின் பென்டகனும் வெளியுறவுத் துறையும் கூறுவது ‘அப்பட்டமான பொய்யான கதை’ என்று தெரிவித்துள்ளது.

ஆனால் அல்-ஷிஃபாவில் ஹமாசின் நடவடிக்கைகளை தனது உளவுத் துறை மதிப்பிட்டுள்ளதை அமெரிக்கா உறுதியாக நம்புகிறது.

அந்த விவரங்களை அமெரிக்கா விளக்கவோ பகிர்ந்துகொள்ளவோ இல்லை.

எகிப்தின் ரஃபா பாதை வழியாக வெள்ளிக்கிழமை மனிதாபிமான உதவிகள் நிறுத்தப்படுவது குறித்து ஐநா கவலை தெரிவித்தது.

இந்நிலையில், காஸாவில் உள்ள இரண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குத் தேவையான எரிசக்தி வளங்கள் தீர்ந்து வருவதால் எந்த நேரத்திலும் தொலைத் தொடர்புச் சேவைகள் துண்டிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் எரிபொருள் ஏற்றுமதியை அனுமதிப்பதில்லை. ஹமாஸ் தங்களுடைய ராணுவத்துக்கு எரிபொருளை பயன்படுத்தலாம் என்பதே அதற்கு காரணம்.

தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டு, எரிபொருள் தீர்ந்துவிட்டால் டிரக்கில் கொண்டு வரப்படும் மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைப்பதும் சிரமமாகிவிடும் என்று ‘UNRWA’ எனும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா அமைப்பு குறிப்பிட்டது.

“எரிபொருள் வராமல் போனால் மக்கள் உயிரிழக்க நேரிடும். விரைவில் எரிபொருள் கிடைப்பது அவசியம்,” என்று அந்த அமைப்பின் ஆணையர் பிலிப் லஸாரினி எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here