அண்டார்டிகாவில் உடைந்த பனிப்பாறை.. சென்னையைவிட 3 மடங்கு பெரிசாம்! இந்தியாவுக்கு ஆபத்து?

குயின் மவுட் லேண்ட்: சென்னையை விட மூன்று மடங்கு பெரிய பனிப்பாறை ஒன்று அண்டார்டிகாவில் உடைந்து கடலில் பயணிக்க தொடங்கியுள்ளது. இது உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஒட்டு மொத்த மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பது காலநிலை மாற்றம்தான். இதனால் அண்டார்டிகா மற்றும் ஆர்டிக் பகுதியிலிருந்து பனி கட்டிகள் அதிக அளவு உருகுகின்றன. இப்படியே போனால் கடல் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரிக்கும். அதாவது சென்னை போன்ற கடலோர நகரங்கள் முற்றிலுமாக மூழ்கிவிடும். மட்டுமல்லாது வானிலையில் எதிர்பாராத மாற்றங்கள் உருவாகும். ஒரு பக்கம் அதிக வறட்சியும், மறு பக்கம் அதிக மழை வெள்ளமும் ஏற்படும்.

எனவே பூமி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த வேண்டும் என விஞ்ஞானிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இப்படி இருக்கையில் மற்றொரு எச்சரிக்கையை அவர்கள் விடுத்திருக்கிறார்கள். அதாவது சென்னையை விட சைஸில் மூன்று மடங்கு பெரியதாக இருக்கும் பெரிய பனி கட்டி ஒன்று அண்டார்டிகாவிலிருந்து உடைந்து கடலில் பயணிக்க தொடங்கியுள்ளது.

A23a என பெயரிடப்பட்டுள்ள இந்த பனி பாறையில் ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யா ஆய்வகத்தை அமைத்து ஆய்வில் ஈடுபட்டிருந்தது. கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த பாறை உடைய தொடங்கிவிட்டது. சுமார் 4 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவை கொண்ட இந்த பனிக்கட்டி தற்போது அண்டார்டிக்காவை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற தொடங்கியுள்ளது.

இது குறித்து பிரிட்டிஷ் ஆய்வாளர் ஆலிவர் மார்ஷ் கூறுகையில், “இந்த பனி பாறை எப்படி உருகியது என்பது தெரியவில்லை. ஆனால் உலக வெப்பமயமாதல் என்பதுதான் பிரதான காரணமாக இருக்கக்கூடும். இது போன்று ஏற்கெனவே பனி பாறைகள் உருகி இருக்கின்றன. அதை எல்லாவற்றையும் விட இது பெரியது. இப்படி உருகும் பாறைகள் கடல் நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டு ஏதாவது நாடுகளுடன் மோதினால் அங்கு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

கடந்த 2020ம் ஆண்டு இதேபோல A68 எனும் பனிப்பாறை உருகி கடலில் பயணித்தது. ஒரு கட்டத்தில் தெற்கு ஜார்ஜியா தீவின் மீது மோத இருந்தது. ஆனால் அதற்குள் இது பல துண்டுகளாக உடைந்துவிட்டதால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. A68 பனிப்பாறை அளவில் சிறியது, அதனால் பிரச்னை இல்லை. A23a பனிப்பாறை அப்படி இல்லை. இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

உலக அளவில் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் கடந்த 2021ம் ஆண்டை விட இப்போது 1.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இப்படியே போனால், பாரிஸ் உடன்படிக்கையில் எடுக்கப்பட்டுள்ள உறுதிமொழிகளை அமல்படுத்தினாலும் கூட நமது பூமியின் வெப்பம் 2100ம் ஆண்டில் 2.5லிருந்து 2.9 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இதனால் ஏற்படும் வெப்பம் இப்போது உருகிய A23a பனி பாறைகளை விட அதிக அளவு கொண்ட பனி பாறைகளை உருக்கும். இவை இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில்தான் அதிக பதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here