இந்தியா-பாரத் சர்ச்சைக்கு இடையே… பாரத் மாதா கீ ஜெய் என பதிவிட்ட நடிகர் அமிதாப் பச்சன்

நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற பெயரிலான கூட்டணியை அமைத்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றன. இதன்படி, பீகாரின் பாட்னா நகரம், பெங்களூரு மற்றும் சமீபத்தில் மும்பை என கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு வருகிற 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அதற்கான அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு உள்ளது என சர்ச்சை எழுந்தது. இந்த இந்தியா மற்றும் பாரத் என்ற பெயர் சர்ச்சைக்கு இடையே, நடிகர் அமிதாப் பச்சன் தன்னுடைய எக்ஸ் பதிவில் (முன்பு டுவிட்டர்), பாரத் மாதா கீ ஜெய் என பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.

இதனால், இந்தியாவின் பெயர் மாற்றத்திற்கு ஏற்ப, பிக் பி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அமிதாப் பச்சன், அதற்கான தனது ஆதரவை வெளிப்படுத்தி உள்ளார் என பார்க்கப்படுகிறது. அவரது டுவீட் வெளியானதும், அவருடைய ஆதரவுக்காக ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபை எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் இன்று கூறும்போது, வருகிற 9ஆம் தேதி நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டுக்கான இரவு விருந்தில் கலந்து கொள்ள ராஷ்டிரபதி பவன் சார்பில் விடப்பட்ட அழைப்பில், இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக, பாரத குடியரசு தலைவர் என குறிப்பிடப்பட்டு இருந்தது என குற்றச்சாட்டாக கூறினார்.இதுபற்றி அவர் கூறும்போது, பிரதமர் மோடி வரலாறை திரித்து, இந்தியாவை பிரிக்கிறார் என்றும் குற்றச்சாட்டு கூறினார்.

தொடர்ந்து அவர், இந்தியா கூட்டணி கட்சிகளின் கருத்துரு என்ன? அது பாரத் என்றே உள்ளது. நல்லிணக்கம், அமைதி, நட்புறவுகள் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை கொண்டு வருவது என்றே பொருள்படும் என அவர் தெரிவித்து உள்ளார். (BHARAT) என ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும் உரிய விரிவாக்கங்களை அவர் வெளிப்படுத்தி உள்ளார். ஆனால், மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கூறும்போது, பாரத் என்றே நாடு முன்பு இருந்தது. தொடர்ந்து பாரத் என்றே இருக்கும் என காங்கிரசை கடுமையாக சாடி பேசினார்.

பா.ஜ.க.வின் ராஜ்யசபை எம்.பி. ஹர்நாத் சிங் யாதவ் கூறும்போது, இந்தியா என்ற வார்த்தை, பிரிட்டிஷார் நமக்கு கொடுத்து சென்றது. அது அவமதிக்கும் வகையிலானது. ஆனால், பாரத் என்ற வார்த்தை நம்முடைய கலாசாரத்தின் அடையாளம். நம்முடைய அரசியல் சாசனத்தில் மாற்றம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். பாரத் என்ற வார்த்தை அதில் சேர்க்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here