பேரழிவு! ராட்சத மோட்டார்கள் மூலம் காசா சுரங்கங்களை மூழ்கடிக்கும் இஸ்ரேல்?

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், காசா சுரங்கப் பாதைகளை மூழ்கடிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாகப் பரபர தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த அக். 7ஆம் தேதி ஆரம்பித்த போர் இரண்டு மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரை முதலில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி ஹாமஸ் தான் தொடங்கி வைத்தது. இஸ்ரேல் மீது அக். 7இல் ஹமாஸ் சரமாரி தாக்குதலை நடத்தியது.

அதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கிய இஸ்ரேல், ஹமாஸ் மீது தாக்குதலை ஆரம்பித்தது. காசா பகுதியில் ஏவுகணை தாக்குதலை நடத்திய இஸ்ரேல், அடுத்து உள்ளே இறங்கியும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கே மோசமான சூழல் உருவாகியுள்ளது.

காசா: காசாவை பொறுத்தவரை அங்கே அமைந்துள்ள சுரங்கப்பாதைகள் தான் ஹமாசுக்கு ஆயுதமாக இருக்கிறது. இஸ்ரேல் மீது மறைந்திருந்து தாக்குதலை நடத்த ஹமாசுக்கு இந்த சுரங்கங்கள் தான் உதவுகிறது. இந்த சுரங்கத்தை அழித்தால் ஹமாஸை அழிக்க முடியும் என்பதை உணர்ந்த இஸ்ரேல் இப்போது அதைக் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதற்கிடையே இந்த விரிவான காசா சுரங்கப் பாதைகளை அழிக்க ஹமாஸ் திட்டம் ஒன்றைப் போட்டுள்ளது. அதாவது காசா பகுதியில் உள்ள ஹமாஸின் சுரங்கப்பாதை வலையமைப்பை மொத்தமாக வெள்ளத்தில் மூழ்கடிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காகப் பெரிய மோட்டர் பம்புகளை அப்பகுதியில் குவித்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூழ்கடிக்கத் திட்டம்: சுரங்கப் பாதைகளை வைத்து ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கிருந்து அவர்களை வெளியேற்ற இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இது காசாவின் நீர் சப்ளையையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. காசா சுரங்கங்களை மூழ்கடிக்கும் திட்டம் இருப்பதாகவும் அது குறித்து இறுதி ஆலோசனை நடந்து கொண்டிருப்பதாகவும் இஸ்ரேலிய அரசு உயர் அதிகாரி ஒப்புக் கொண்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதற்குத் தேவையான நடவடிக்கைகளை இஸ்ரேல் பாதுகாப்புப் படை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இதை எப்போது ஆரம்பிக்க உள்ளனர்.. எந்தெந்த பகுதிகளை மூழ்கடிக்க உள்ளனர் என்பது குறித்த தகவல்களை அந்த அதிகாரிகள் பகிர்ந்து கொள்ளவில்லை.

இஸ்ரேல் சொல்வது என்ன: இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரி வெளிப்படையாக இந்த விவகாரத்தில் கருத்துச் சொல்லவில்லை. அவர், “ஹமாஸை முழுமையாக அகற்றுவது மட்டுமே எங்கள் நோக்கம். இதற்காக நாங்கள் பல்வேறு ராணுவ மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவோம்” என்று மட்டும் பட்டும் படாமல் கூறிவிட்டார். இந்த நிலத்தடி சுரங்கங்கள் தான் ஹமாஸ் படை இஸ்ரேலுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தவும், ராணுவ நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் மாதம் முதலே இந்த சுரங்கங்களை மூழ்கடிக்கத் தேவையான நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுத்து வருகிறது. இதற்காக அல்-ஷாதி அகதிகள் முகாமுக்கு வடக்கே பெரிய பம்புகளை அமைக்கும் பணிகளை இஸ்ரேல் ராணுவம் நிறைவு செய்துள்ளது. இந்த பம்புகள் மூலம் ஒரு மணி நேரத்திற்குப் பல ஆயிரம் கன மீட்டர் தண்ணீரைச் சுரங்கங்களில் பாய வைக்க முடியும்.

அமெரிக்காவுக்குத் தெரியும்: இஸ்ரேலின் இந்தத் திட்டம் குறித்துக் கடந்த நவ. மாதமே அமெரிக்காவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இஸ்ரேல் அரசு எந்தளவுக்கு இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ரெடியாக இருக்கிறது என்பது குறித்த அமெரிக்காவுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here