முகத்தை வைத்தே அரிய நோய்களை அடையாளம் காணும் மென்பொருள்

மனிதனின் முகத்தை வைத்து அரிய நோய்களை அடையாளம் கண்டுவிடலாம் என்பது தெரியவந்து இருக்கிறது.

வர்த்தக ரீதியில் கிடைக்கக்கூடிய முப்பரிமாண படச்சாதனங்களைக் கொண்டு எடுக்கப்படுகின்ற படங்களைப் பயன்படுத்தி அந்த மென்பொருள் வெவ்வேறான 50க்கும் மேற்பட்ட முக அளவீடுகளை ஒப்பிட்டு அரிய நோய்கள் தொடர்பான மரபுக் கூறுகளைக் கண்டு பிடித்துவிடும்.

முகம், உடம்பின் மேற்பகுதியில் வீக்கம் ஏற்படுவதற்கான ஹெச்ஏஇ என்ற மரபணு குறைபாடுகளுடன் தொடர்புடைய முக அம்சங்களைப் பகுப்பாய்வு செய்யும் நோக்கத்துடன் சிங்கப்பூரில் இப்போது ஓர் ஆய்வு நடந்து வருகிறது.

அந்த ஆய்வின் ஓர் அங்கமாக கிளினிஃபேஸ் முப்பரிமாண மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஹெச்ஏஇ மரபணு குறைபாடு உலகம் முழுவதும் 50,000 பேரில் ஒருவரை பாதிக்கிறது. அந்தக் குறைபாட்டின் அறிகுறி 15 வயதில் வெளியே தெரியவரும்.

சுவாசக் குழாய்களில் வீக்கம் ஏற்பட்டால் மரணம் கூட ஏற்பட்டுவிடலாம்.

வழக்கமான வாழ்க்கையைத் தொடர வேண்டுமானால் அத்தகைய நோயாளிகள் இடைவிடாமல் மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்று டான் டோக் செங் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் டான் ஸி-சின் கூறினார்.

சிங்கப்பூரை பொறுத்தவரை ஹெச்ஏஇ 21 பேரைப் பாதித்து இருக்கிறது என்று மதிப்பிடப்படுகிறது.

அந்த மரபணு குறைபாடு தொடர்பில் நான்கு பேர் மரணமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹெச்ஏஇ மரபணு குறைபாடு இருப்பதாக தெரியவரும் சிறாருக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் கேகே மாதர், சிறார் மருத்துவமனை இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்.

மரபணு காரணமாக ஏற்படக்கூடிய அரிய வகை நோய்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு நோய்களை முகத்தில் தெரியக்கூடிய அறிகுறிகளை வைத்தே கண்டுபிடித்துவிடலாம் என்று கர்டின் பல்கலைக்கழக ஆய்வுத் துறை வல்லுநர் டாக்டர் ரிச்சர்ட் பால்மர் கூறினார். இவரே கிளினிஃபேஸ் மென்பொருள் உருவாக்கக் குழுவின் தலைவர் ஆவார்.

முப்பரிமாண மென்பொருள் மனிதர்களால் கண்டறிய முடியாத கூறுகளை அடையாளம் கண்டு தெரிந்துகொள்ள உதவ முடியும் என்று கேகே மருத்துவமனையின் மூத்த ஆலோசகரான டாக்டர் சாமுயா ஜாமுவார் கூறினார்.

சிங்கப்பூரில் சுகாதாரப் பராமரிப்பு புத்தாக்க நிலையத்தில் ஜூலை மாதம் நடந்த ஆசிய துல்லிய பொதுச் சுகாதார 2023 மாநாட்டையொட்டி நடந்த ஒரு கருத்தரங்கில் டாக்டர் பால்மரும் டாக்டர் ஜாமுவாரும் தங்களுடைய ஆய்வு முடிவுகளை வெளியிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here