சிங்கப்பூர்:
கடந்த டிசம்பர் 6, 7ஆம் தேதிகளில் நடத்திய சோதனைகளில் மொத்தம் 3,749 பெட்டிகளில் இருந்த தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத் துறை தெரிவித்துள்ளது.
இந்த சோதனைகள் துவாஸ் லிங்க் 3, மரின் பரேட் சென்ட்ரல் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டதாக சுங்கத்துறை டிசம்பர் 12ஆம் தேதி தெரிவித்தது.
துவாசில் லோரி ஒன்றில் 1,509 பெட்டிகள் சிகரெட்டுகளுடன் மேலும் 3,628 பாக்கெட்டுகள் கள்ள சிகரெட்டுகள் பிடிபட்டன. சீன நாட்டவரான 31 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து மரின் பரேட்டில் வேன் ஒன்றில் 2,240 பெட்டிகள் கள்ள சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன. அது தொடர்பில் வேன் ஓட்டுநரான 32 வயது சிங்கப்பூர் ஆடவர் கைது செய்யப்பட்டார்.
லோரி, வேன் இரண்டுமே பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகள் மூலம் $440,127 பொருள், சேவை வரி மோசடி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
சிங்கப்பூர் சட்டத்தின்கீழ், கள்ள சிகரெட்டுகளை வாங்குதல், விற்பனை செய்தல், வைத்திருத்தல், விநியோகம் செய்தல் ஆகியவை கடுமையான குற்றங்களாகக் கருதப்படுகிறது. இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், செல்லுபடியாகும் வரித் தொகையைப் போன்று அதிகபட்சம் 40 விழுக்காட்டுத் தொகை அபராதமோ ஆறு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.