துபாயில், சிஓபி28 (COP28) என்ற காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்த 28-வது உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியாவின் மணிப்பூரைச் சேர்ந்த 12 வயதான லிசிபிரியா கங்குஜம், திமோர் லெஸ்டே நாட்டின் சிறப்பு தூதராக கலந்துகொண்டார். லிசிபிரியா 6 வயது முதல், சுற்றுச்சூழல் ஆர்வலராக செயல்பட்டு வருகிறது.
உலக அளவில் இளைய காலநிலை ஆர்வலர்களில் ஒருவரான லிசிபிரியா, இந்தியாவின் அதிக மாசு அளவைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்களை இயற்றவும், பள்ளிகளில் காலநிலை மாற்ற எழுத்தறிவை கட்டாயமாக்கவும் நான்கு ஆண்டுகளாக பிரசாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிஓபி28 மாநாட்டில், லிசிபிரியா ‘புதைபடிவ எரிவாயுக்களுக்குத் தடை விதியுங்கள். நம் பூமி மற்றும் நம் எதிர்காலத்தை காப்பாற்றுங்கள்’ என்று என்று எழுதப்பட்டிருந்த பதாகையுடன் மேடையில் ஏறினார். இதனைக் கண்ட பார்வையாளர்கள் பலரும் வரவேற்று கைதட்டினர். ஆனாலும் அவருடைய நடவடிக்கை விதிகளுக்குப் புறம்பானது என்பதால் அவர் மாநாட்டில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. அத்துடன் அங்கிருந்த காவலர்களாலும் அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் மாநாட்டில் நடந்தது குறித்த வீடியோவை தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்த லிசிபிரியா, சிஓபி28-ன் ஐ.நா உயர்மட்ட முழு அமர்வை சீர்குலைக்கும் எனது எதிர்ப்பின் முழு வீடியோ இதோ. இந்தப் போராட்டத்திற்குப் பிறகு 30 நிமிடங்களுக்கும் மேலாக என்னைக் காவலில் வைத்தனர். நான் செய்த குற்றம், இன்றைய காலநிலை நெருக்கடிக்கு முக்கிய காரணமான புதைபடிவ எரிபொருட்களை வெளியேற்றக் கோரியது. இப்போது அவர்கள் என்னை சிஓபி28-லிருந்து வெளியேற்றினர் என்று கூறியிருந்தார்.