நகைக்கடை மோசடி: எனக்கு சம்பந்தமில்லை என்று நம்பியவர்களுக்கு நன்றி- நடிகர் பிரகாஷ் ராஜ் டுவிட்

திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரணவ் ஜூவல்லரி நகைக்கடையினர் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத 11.60 கிலோ எடையுள்ள தங்கநகைகளும், 23.70 லட்சம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை அறிவித்தது.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு நபர்களிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிரணவ் ஜூவல்லரி நகைக்கடை விளம்பரத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜூக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கலாம் என அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது.

ஆனால், கடையின் உரிமையாளர் மதனை காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், இந்த மோசடியில் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பு இல்லை என மதன் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரகாஷ்ராஜ் விளம்பரத்தில் மட்டும் நடித்ததாகவும், நிறுவனத்தில் எந்த முதலீடும் செய்யவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

மோசடியில் தொடர்பில்லாததால், பிரகாஷ்ராஜிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பிரணவ் நகைக்கடை மோசடி வழக்குக்கும் பிரகாஷ் ராஜூக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என புலனாய்வுக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here