பெர்கேசோ புனர்வாழ்வு மையங்களில் புதுவாழ்க்கை பெறும் சந்தாதாரர்கள்-மனிதவள அமைச்சர்

(ரெ. மாலினி)

மலாக்கா:
ணியிடப் பேரிடர்களில் பாதிக்கப் படும் மூவருள் இருவர் பெர்கேசோ நடத்தும் பெர்கேசோ துன் அப்துல் ரசாக் புனர்வாழ்வு மையத்தில் முழுமையான புனர்வாழ்வு சிகிச்சை பெறுகின்றனர் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்தார்.

2014 அக்டோபர் மாதம் இந்தப் புனர்வாழ்வு மையம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்றளவில் 15,214 தனிநபர்கள் புனர்வாழ்வு சிகிச்சை பெற்றிருக்கின்றனர் என்று அவர் சொன்னார்.

புனர்வாழ்வு சிகிச்சை மருத்துவம், தொழிற்பயிற்சி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய புனர்வாழ்வு மையமாக மலேசியாவில் உள்ள பெர்கேசோ துன் அப்துல் ரசாக் புனர்வாழ்வு மையம் திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு மலாக்கா, ஆயர்குரோவில் உள்ள பெர்கேசோ துன் அப்துல் ரசாக் புனர்வாழ்வு மையத்திற்கு 2024 ஜனவரி 15ஆம் தேதி வருகை புரிந்த மனிதவள அமைச்சருக்கு அதன் முழு செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த மையம் அவருக்கு முழுமையாகச் சுற்றிக் காட்டப்பட்டது.

இங்கு செயல்படும் அனைத்துப் பிரிவுகள் குறித்தும் விளக்கம் பெற்ற அவர், மிக நவீன வசதிகளைக் கொண்டிருக்கும் இம்மையத்தின் செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டினார்.


மலேசியத் தொழிலாளர்களின் நலன்களுக்காக மனிதவள அமைச்சு என்றும் பக்கபலமாக இருக்கும். அவர்களின் உரிமைகளை நிலை நிறுத்தும். தொழிலாளர் நலன், அவர்களுக்கான தொழில்திறன் பயிற்சி, தொழிலாளர் திறன் ஆகியவற்றைத் தொடர்ந்து வலுப்படுத்து வதற்கு மனிதவள அமைச்சு பாடுபடும் என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.

பெர்கேசோ துன் அப்துல் ரசாக் புனர்வாழ்வு மையமானது சந்தா தாரர்களுக்கு மட்டுமன்றி சந்தா செலுத்தாதவர் களுக்கும் புனர்வாழ்வு சிகிச்சை அளித்து வருகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

சந்தாதாரர் அல்லாதவர்களும் சொந்தச் செலவில் இங்கு சிகிச்சையும் புனர்வாழ்வு மருத்துவமும் பெறலாம் என்றும் அமைச்சர் சொன்னார்.

மலாக்கா மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ உத்தாமா அப்துல் ராவுஃப் யூசோ, துணை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் ஹாஜி முகமட், பெர்கேசோ வாரியத் தலைவர் டத்தோஸ்ரீ சீபாஹான் கமால், பெர்கேசோ தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான் அஸிஸ் முகமட், பெர்கேசோ துன் அப்துல் ரசாக் புனர்வாழ்வு மையத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ டாக்டர் ஹஃபிஸ் ஹுசேன் ஆகியோரும் அமைச்சருடன் வருகை தந்தனர்.

தென் கிழக்காசியா விலேயே முதலாவது என்று பிரபலம் பெற்றிருக்கும் சைபர்னிக், நியூரோ – ரொபோட்டிக் புனர் வாழ்வு கிளினிக் கையும் மனிதவள அமைச்சர் பார்வை யிட்டார். இந்தக் கிளினிக் 2018 நவம்பர் மாதம் முதல் செயல்படத் தொடங்கியது.

நியூரோ ரொபோட்டிக் தொழில்நுட்பத் தைப் பயன்படுத்தி புனர்வாழ்வு சிகிச்சை அளிக்கும் பெர்கேசோவின் முதல் திட்டமாகவும் இது விளங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.


இதனிடையே அடுத்த 5 ஆண்டுகளுக்குள் மேலும் மூன்று புனர்வாழ்வு மையங்களை அமைக்க வேண்டும் என்று பெர்கேசோ பணிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பேராக், ஈப்போவில் புதிய மையம் இவ்வாண்டு செயல்படத் தொடங்கும். அதேபோன்று திரெங்கானுவில் மற்றொரு புனர்வாழ்வு மையம் கட்டுமானத்தில் உள்ளது. சபா, சரவாக் ஆகிய மாநிலங்களிலும் புதிய பெர்கேசோ புனர்வாழ்வு மையங்களை நிர்மாணிக்கும் திட்டம் உள்ளதாகவும் ஸ்டீவன் சிம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here