பெருநாள் கால ரஹ்மா விற்பனைத் திட்டம் தனியார் துறையினருக்கு விரிவுபடுத்தப்படுகிறது

(எம். அன்பா)

புத்ராஜெயா:

மக்களின் வாழ்வாதாரச் செலவினங்களை எதிர்கொள்ளும் முன்னெடுப்பின் வியூகங்களுள் ஒன்றான பாயோங் ரஹ்மா திட்டத்தை இவ்வாண்டும் தொடர்ந்து வலுப்படுத்த உள்நாட்டு வாணிபம், வாழ்வாதாரச் செலவினத்துறை அமைச்சு  எண்ணம் கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் பெருநாள் கால ரஹ்மா கருணை விற்பனைத் திட்டத்தை (பிஜேஐஆர்) அறிமுகப்படுத்தப்படுவதாக அத்துறை அமைச்சர் டத்தோ அர்மிஸான் முகமட் அலி தெரிவித்தார்.

இந்த ரஹ்மா கருணை திட்டம் அரசாங்க மானியத்தை சம்பந்தப்படுத்தாமல் ரஹ்மா கொள்கையின் கீழ் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு இன்னும் நிறைய தனியார் தொழில்துறைகளுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும்.

ஆனாலும் இதில் மக்கள் நலனுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அண்மையில் நடைபெற்ற உள்நாட்டு வாணிபம், தொழில்துறை வாழ்வாதார செலவினத்துறை அமைச்சின் புத்தாண்டு ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்டார்.

இந்த இலக்கை அரசாங்க முயற்சிகளில் மட்டுமல்லாது தனியார்துறை செயல்பாட்டிலும் விரிவுபடுத்த நாங்கள் இந்த முன்னெடுப்பை வரையறுத்துள்ளோம்.

குறிப்பாக தங்கள் மத்தியில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக சில தொழில்துறையினர் எங்களைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

ரஹ்மா  குடை திட்டத்தை மக்கள் மத்தியில் ஒன்றிணைந்து  செயல்படுத்த அவர்களும் எண்ணம் கொண்டுள்ளனர். அதேசமயம் இந்தத் திட்டத்தில் மக்கள் அனைவருக்கும் விரிவுபடுத்துவது அவ்வளவு ஏற்புடைய காரியமல்ல.

எனவே இந்தக் கருணை திட்டத்தை தனியார் துறையினருக்கும் விரிவுபடுத்துகிறோம். இதன் அடிப்படையில் நாடு தழுவிய அளவில் இந்த ரஹ்மா கருணை விற்பனைத் திட்ட அட்டவணை அமைச்சின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் பார்வைக்கு வைக்கப்படும்.

தங்கள் பகுதியில் நடத்தப்படும் இந்த விற்பனைத் திட்டத்தை மக்கள் முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கு இது பேருதவியாக இருக்கும். மேலும் இந்தக் கருணை  விற்பனைத் திட்டத்தில் ரஹ்மா சந்தை முன்னெடுப்பும் விரிவுபடுத்தப்படும்.

மக்களின் அத்தியாவசிய தேர்வுகளான மீன் வகைகள், கோழி இறைச்சி போன்ற சமையல் உணவுப் பொருட்களும் அங்கு விற்கப்படும் என்றார் அவர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் அமைச்சு செயல்படுத்திய இந்த பாயோங் ரஹ்மா திட்டத்தில் 81 விழுக்காட்டினர் திருப்தி அடைந்திருப்பதாக ஆய்வு கூறுகின்றது.

அதேசமயம் இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று எஞ்சிய தரப்பினர்  எதிர்பார்ப்பதாகவும் தெரிய வந்துள்ளது. எனவே இந்தத் திட்டத்தை மேலும் தரம் உயர்த்துவதற்கு மக்களின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் அமைச்சு வரவேற்கிறது.

குறிப்பாக பாயோங் ரஹ்மா திட்டத்தின் தலைமைச் செயலகத்தைத் தொடர்பு கொண்டு மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் எனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே அமைச்சின் அமலாக்க அதிகாரிகளுக்கான காலி பணி இடங்களைப் பூர்த்தி செய்வதற்கு அமைச்சு ஜேபிஏ எனப்படும் பொதுச்சேவை இலாகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தும்.

தற்போது நாடு தழுவிய அளவில் 2,200 அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் உள்ளனர். அதேசமயம் இந்த எண்ணிக்கை இன்னும் குறைவாகவே உள்ளது.

எனவே காலி பணி இடங்களைப் பூர்த்தி செய்வதற்கு நாம் பொதுச்சேவை இலாகாவிடம் கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் அர்மிஸான் கூறினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here