வன்மத்தின் உச்சம்.. இந்திய விமானத்தை பயன்படுத்த அனுமதிக்காத மாலத்தீவு அதிபர்! பறிபோன சிறுவன் உயிர்

மாலி: இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையே தற்போது மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில் தான் மாலத்தீவுக்கு இந்தியா வழங்கிய ட்ரோனியர் விமானத்தை பயன்படுத்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அனுமதி மறுத்த நிலையில் உயிருக்கு போராடிய 14 வயது சிறுவன் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பலியான ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் அண்டை நாடாக தீவுத்தேசமான மாலத்தீவு உள்ளது. அளவில் சிறிதாக இருந்தாலும் கூட தற்போது மாலத்தீவு இந்தியாவிடம் வாலாட்டி வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு அங்கு நடந்த அதிபர் தேர்தலுக்கு பிறகே இந்தியாவிடம் மாலத்தீவு மோத தொடங்கியுள்ளது.

இந்த தேர்தலில் மாலத்தீவு புதிய அதிபராக முகமது முய்சு வெற்றி பெற்றார். இவர் சீனா ஆதரவாளர். அதோடு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர். இதனால் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்திய வீரர்களை மார்ச் 15ம் தேதிக்குள் வெளியேறும்படி அவர் கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் லட்சத்தீவுக்கு சென்று போட்டோக்களை வெளியிட்டு இருந்தார்.

இது பெரிய அளவில் விவாதத்தை கிளப்பி இருந்தது. மாலத்தீவின் சுற்றுலாவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி போட்டோ போட்டதாக கூறி மாலத்தீவின் எம்பிக்கள், அமைச்சர்கள் வன்மத்தை கக்கினர். அதோடு இந்தியர்களை தரக்குறைவாக விமர்சித்தனர். இது பெரிய அளவில் சர்ச்சையானது. இதையடுத்து இந்தியர்கள் மாலத்தீவுக்கான சுற்றுலாவை ரத்து செய்தனர். இதனால் மாலத்தீவின் வருமானம் பெரிய அளவில் சரிவை சந்தித்தது.

இதையடுத்து சீனாவில் இருந்து அதிகளவில் மக்களை சுற்றுலாவுக்கு அனுப்ப வேண்டும் என மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கெஞ்சினார். இப்படியாக இந்தியா-மாலத்தீவு இடையே மோதல் என்பது நீடித்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்தியா வழங்கிய விமானத்தை பயன்படுத்த மாலத்தீவு அதிபர் அனுமதி வழங்காத நிலையில் அங்குள்ள 14 வயது சிறுவனின் உயிர் பறிப்போய் உள்ள திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது இந்தியா சார்பில் மாலத்தீவுக்கு விமானங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் ட்ரோனியர் ரக விமானம் மிகவும் முக்கியமானதாகும். இந்த விமானம் என்பது மாலத்தீவில் மருத்துவ துறையில் ‛ஏர் ஆம்புலன்ஸாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாலத்தீவின் பிற சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் மாலத்தீவின் கபி அலிப் விலிங்இல்ஸ் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் கடந்த 17 ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டான். இந்த சிறுவனுக்கு மூளையில் கட்டி உள்ள நிலையில் சிறுவனுக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டுள்ளது.

சிறுவன் வசிக்கும் பகுதியில் உயர்தர சிகிச்சை வசதி என்பது இல்லை. உயர்தர சிகிச்சை வேண்டும் என்றால் மாலத்தீவின் தலைநகர் மாலிக்கு தான் செல்ல வேண்டும். இதையடுத்து சிறுவனை ‛ஏர் ஆம்புலன்ஸ்’ மூலம் மாலிக்கு கொண்டு செல்ல அவனது தந்தை போன் செய்துள்ளார். ஆனால் ‛ஏர் ஆம்புலன்ஸ்’ சேவைக்கு இந்தியா வழங்கிய ட்ரோனியர் விமானத்தை பயன்படுத்த வேண்டும் என்பதால் அதிபர் முகமது முய்சு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்துள்ளார்.

இதனால் சிறுவனை மேல்சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பிறகு 16 மணிநேரம் கழித்து விமானத்தில் சிறுவனை அழைத்து செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சிறுவன் மாலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்துள்ளான். சிறுவனுக்கு முன்கூட்டியே சிகிச்சை கிடைத்து இருந்தால் அவன் பிழைத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

சிறுவனின் உடலை பார்த்து அவனது குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும் இந்திய விமானத்தை பயன்படுத்த அனுமதி வழங்குவதில் தாமதம் செய்த அதிபர் முகமது முய்சுவின் செயலை சிறுவனின் குடும்பத்தினர் கடுமையாக கண்டித்துள்ளனர். மேலும் எதிர்க்கட்சி தலைவர்களை விளாசியுள்ளனர். மக்களின் உயிரோடு அதிபர் முகமது முய்சு விளையாடக்கூடாது என கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக மாலத்தீவின் உள்ளூர் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இதற்கிடையே தான் ஏர் ஆம்புலன்ஸ் சேவையை வழங்கும் நிறுவனம் இந்த விவகாரம் தொடர்பாக வேறு மாதிரியான விளக்கத்தை அளித்துள்ளது. அதாவது,  அதேவேளை, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே சிறுவனை உடனடியாக மாலிக்கு கொண்டு வர முடியவில்லை எனக்கூறியுள்ளது. ஆனால் அதிபர் முகமது முய்சுவை காக்க அந்த நிறுவனம் இப்படி கூறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here