பாகிஸ்தானில் இணையதள சேவை துண்டிப்பு; வெளிநாட்டு எல்லைகள் மூடலால் பரபரப்பு

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் இனறு நடைபெற்று வருகிறது. பாதுகாப்புக்காக அந்நாட்டில் மொபைல் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்டை நாட்டு எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் 16வது நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் நடைபெறும் இந்தத் தேர்தலில் 12.85 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.

கடந்த 2018ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன் சாஃப் கட்சி ஆட்சியை கைப்பற்றியது.

ஆனால் பின்னர், ஊழல் மற்றும் ரகசிய காப்புறுதி மீறல் வழக்குகளில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மனைவியும் தற்போது வீட்டுக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தெஹ்ரீக்-இ-இன் சாஃப் கட்சியின் சின்னமான கிரிக்கெட் ‘பேட்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதனால் இம்ரான் கான் கட்சி வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் தேர்தலை எதிர்கொண்டுள்ளனர்.

தேர்தலை முன்னிட்டு நேற்று நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 28 பேர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக சட்டம் – ஒழுங்கை பராமரிப்பதற்காக பாகிஸ்தான் முழுவதும் மொபைல் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுத் தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு அண்டை நாடான ஆப்கானிஸ்தான், ஈரான் எல்லைகளை மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் ராணுவத்தின் ஆதரவு கொண்ட, பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்என்) கட்சி அதிக இடங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது, 74 வயதான அக்கட்சி நிறுவனர் நவாஸ் ஷெரீப் இன்றைய தேர்தலில் வெற்றி பெற்றால், பாகிஸ்தானில் 4வது முறையாக பிரதமர் பதவியை ஏற்பார்.

இதேபோல், முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் மகனும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான பிலாவல் பூட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் (பிபிபி) இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளது. பிரதமர் வேட்பாளராக பிலாவல் பூட்டோ ஜர்தாரி முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

336 இடங்களுக்கு நடைபெறும் இத்தேர்தலில் மொத்தம் 5,121 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 4,807 பேர் ஆண்கள், 312 பேர் பெண்கள், 2 பேர் திருநங்கைகள் ஆவர்.

44,000 வாக்குச் சாவடிகள் சாதாரணமானவையாகவும், 29,985 வாக்குச் சாவடிகள் பதற்றமானதாகவும், 16,766 வாக்குச் சாவடிகள் மிக பதற்றமான வாக்குச் சாவடிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தலை முன்னிட்டு ராணுவம், துணை ராணுவம், காவல்துறை என 6,50,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here