16 ஷரியா குற்றவியல் விதிகள் சட்டத்துக்கு புறம்பானவை; உச்ச நீதிமன்றம்

புத்ராஜெயா:

கிளந்தான் மாநிலம் இயற்றிய சுமார் 16 இஸ்லாமிய சட்டங்கள் அரசியல் நிர்ணயச் சட்டத்துக்கு புறம்பானவை, செல்லாதவை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தத் தீர்ப்பினால் மலேசியாவின் மற்ற மாநிலங்களில் பழக்கத்திலுள்ள பல ஷரியா சட்டங்கள் செல்லாததாகி விடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக மலேசியாவில் இரு வேறு சட்ட அமைப்பு உள்ளது. இங்கு இஸ்லாமிய குற்றவியல், குடும்ப நல சட்டங்கள் நாட்டின் சிவில் சட்டங்களுடன் முஸ்லிம்களைக் கட்டுப்படுத்துகிறது. மலேசியாவின் சிவில் சட்டங்கள் நாடாளுமன்றத்தினால் இயற்றப்படும் நிலையில், மாநில சட்டமன்றங்கள் இஸ்லாமிய சட்டங்களை இயற்றுகின்றன.

உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது பேர் கொண்ட அமர்வில் 8-1 என்ற பெரும்பான்மையில் கிளந்தான் அரசின் 16 ஷரியா குற்றவியல் சட்டங்கள் செல்லாது என்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 9) அன்று தீர்ப்பளித்தது. அந்தச் சட்டங்களில், ஆசனவாயில் பாலியல் உறவு, பாலியல் ரீதியாக துன்புறுத்தல், வழிபாட்டுத் தலங்களை சேதப்படுத்துவது, இறந்தவருடன் உடலுறவு வைத்துக்கொள்வது உட்பட்ட சட்டங்கள் அடங்கும்.

தலைமை நீதிபதி துங்கு மைமுன் துவான் மாட் எட்டு நீதிபதிகளின் பெரும்பான்மை தீர்ப்பை வாசித்தார். கிளந்தான் அரசு இயற்றிய சட்டப் பிரிவுகள் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தின்கீழ் வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

“எனவே, மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டு, இந்த சட்டங்கள் செல்லாது,” என்று அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here