அரசியல் பயணத்தில் விஜய்க்கு துணை நிற்பேன்- சமுத்திரக்கனி

தேவைப்பட்டால் நடிகர் விஜயின் அரசியல் பயணத்தில் அவருக்கு துணை நிற்பேன்” என நடிகர் சமுத்திரக்கனி கூறியுள்ளார்.

விஜயின் அரசியல் பயணத்திற்குப் பலரும் வாழ்த்துக் கூறிவரும் நிலையில், நடிகர் சமுத்திரக்கனி இப்படிக் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய் ’தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கினார். அவரது அரசியல் வரவுக்கு அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர் .

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துவிட்ட விஜய், 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் மட்டுமே இலக்கு என்று சொல்லி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் “தேவைப்பட்டால் நடிகர் விஜயுடன் சேர்ந்து அரசியலில் பயணிப்பேன்” என்று நடிகர் சமுத்திரக்கனி கூறியுள்ளார்.

தென்காசியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சமுத்திரக்கனி, “விஜய் அரசியலுக்கு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அவர் இப்போது தன்னுடைய கரியரில் உச்சத்தில் இருக்கிறார். அதை விட்டு விலகி அரசியலுக்கு வருவதை பெரிய விஷயமாக நான் பார்க்கிறேன். அவர் அரசியலுக்கு வந்து மக்களுக்கு எதாவது செய்யவேண்டும் என்று நினைக்கிறார்.

அவருக்கு நான் இந்த நேரத்தில் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தேவைப்பட்டால் அரசியல் பயணத்தில் அவருக்குத் துணை நிற்பேன். அவர் கூப்பிட வேண்டும் என்கிற அவசியம் எல்லாம் இல்லை. நல்ல விஷயங்களுக்கு நான் எப்போதுமே கூட நிற்பேன்” என தெரிவித்தார்.

பிற சினிமா பிரபலங்கள் விஜயின் அரசியல் வருகைக்கு வாழ்த்தும் வரவேற்பும் மட்டுமே தெரிவித்துள்ள நிலையில், சமுத்திரக்கனி விஜய்க்கு துணை நிற்பேன் என்று பகிரங்கமாக அறிவித்திருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here