சிங்கப்பூரின் ஆகாயக் கண்காட்சியில் அறிமுகமான சீனாவின் விமானம்

சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் ஒன்று சிங்கப்பூரில் நடைபெறும் ஆகாயக் காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

சீனாவின் வர்த்தக விமானக் கழகம் (Comac) தயாரித்து உள்ள அந்த C919 விமானம் ஏர்பஸ் மற்றும் போயிங் ரக விமானங்களுக்கு போட்டி தரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

அந்த விமானம் முதல்முறை சீனாவுக்கு வெளியே பறந்து சென்று சிங்கப்பூர் ஆகாயக் கண்காட்சிக்கு வந்து உள்ளதுடன், இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 18) அதன் அறிமுகம் நடைபெற்றது.

அனைத்துலக பயணிகள் விமானச் சந்தையில் மேற்கத்திய விமானங்களின் இடத்தைப் பிடிக்க சீனா பெருமளவில் முதலீடு செய்து உள்ளது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பயணத்திற்கு ஏற்ற நவீன விமானத்தைத் தன்னாலும் தயாரித்து வழங்க முடியும் என்பதை நிரூபிக்க C919 விமானம் மூலம் அது முயன்றுள்ளது.

இருப்பினும் அந்த விமானத்திற்கு சீனா மட்டுமே சான்றளித்து உள்ளது.

ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்கள் விமானத் தயாரிப்பை அதிகரிக்கவும் புதிய விமானங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யவும் போராடி வருகின்றன.

இந்நிலையில், சீனா தயாரித்துள்ள விமானம் அந்த இரு நிறுவனங்களுக்கு எந்த வகையில் போட்டி தரும் என்பதை விமானப் போக்குவரத்துத் துறை கவனித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here