(ரெ. மாலினி )
மலாக்கா:
லிங்கச் சொரூபமாய் சன்னாசிமலை ஆண்டவராய், மலாக்காவில் அமர்ந்திருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் முருகப்பெருமானுக்கு பிரமாண்டமான முறையில் மாசிமகத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தின் பௌர்ணமி நாளன்று வரும் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் இந்த மாசிமகத் திருவிழாவில், எண்ணில் அடங்க பக்தர்கள் மயில் காவடிகளையும் பால் குடங்களை ஏந்தி ஆறுமுகனுக்கு தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.
மகான் சன்னாசி சித்தர் ஜீவ சமாதி உள்ள இந்தப் புண்ணிய ஸ்தலம், அவரின் தெய்வீக அருள் ஆற்றலுடன் 160 ஆண்டுகளுக்கு மேல் மலாக்காவில் அருளாட்சி செய்து வருகிறது . இந்தியர்கள் மட்டுமின்றி சீனர்கள் அதிகமானோர் இங்கு வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

கந்தனுக்கு அரோகரா ! முருகனுக்கு அரோகரா! சன்னாசிமலை ஆண்டவருக்கு அரோகரா! என பக்தி கோஷம் முழங்க மாசிமகம் முதல் நாள் தொடங்கி மறு நாள் பிற்பகல் 4.00 மணி வரை வண்ண வண்ண மயில் காவடிகளை தாங்கி பக்தர்கள் ஆலயத்தை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடங்களை ஏந்தி பாத யாத்திரையாக மலாக்கா பொய்யாத விநாயகர் ஆலயத்திலிருந்து அதிகாலையில் புறப்பட்டு செங் சன்னாசிமலை வந்தடைந்தனர்.

எழில் கொஞ்சம் செந்தில் வேலனுக்கு பிற்பகல் 12.00 மணிக்கு அபிஷேக ஆராதனைகயை தொடர்ந்து, மகேஸ்வர பூஜைக்கு பின் அன்னாதனம் வழங்கப்பட்டது. ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எம் சரவணன் திருவிழாவில் கலந்து கொண்டார்.

நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகத்தினர் பராமரிப்பில் பாரம்பரியம் பழக்க வழக்கங்கள் மாறாமல் ஆண்டு தோறும் நடைபெற்று மாசிமகத்தில் கலந்துக் கொண்டு அழகிய காவடிகளையும் தமிழ் கடவுள் முருகப்பெருமானை தரிசித்து செல்வதில் மகிழ்சியடைவதாக கூறினர்.

மாசிமகத் திருவிழா அன்று இரவு அழகிய கண்கவர் விளக்குகளால் ஜோடிக்கப்பட்ட வெள்ளி இரதத்தில் தங்க முருகன் தனது தமையன் விநாயகப் பெருமானுடன் இரவு 7.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 7.00 மணிக்கு மலாக்கா நகரில் உள்ள ஸ்ரீ பொய்யாத விநாயகர் ஆலயத்தை வந்தடைந்தார்.

சாலை நெடுகிலும் பக்தர்களின் சிதறு தேங்காய்கள் உடைத்தனர். சீனர்களின் சிங்க நடனங்கள் , வாண வெடிக்கையுடன் வெள்ளி இரத ஊர்வலம் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் புடைச் சூழ விழா கோலம் கண்டது.

மேலும் ஆலய வளாகத்தில் மக்கள் ஓசை சார்பில் பக்தர்களின் தாகத்தை தீர்க்க கனிம நீர் மற்றும் ஐஸ் கிரிம் வழங்கப்பட்டது.






















