வெளிநாட்டினரை கடத்திய குற்றச்சாட்டில் கிளந்தானில் இரண்டு உள்ளூர்வாசிகள் கைது

கோலாலம்பூர்:

கிளந்தானில் மனிதக் கடத்தல் கும்பலுக்கு எதிரான குடிநுழைவுத் துறை மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து இரண்டு உள்ளூர் ஆண்கள் மற்றும் ஆறு மியன்மார் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.

பிப்ரவரி 21 அன்று ஆவணமற்ற வெளிநாட்டினரைக் கொண்டு செல்வதாக நம்பப்படும் ஒரு வாகனத்தை சோதனையிட்டதில் குறித்த எண்மரும் கைது செய்யப்பட்டனர் என்று குடிநுழைவு துறை தலைமை இயக்குநர் டத்தோ ரஸ்லின் ஜூசோ கூறினார்.

“சந்தேக நபர்கள் மலேசியாவிற்குள் வருவதற்கு குபாங் கெரியான்-பாசீர் பூத்தே வழியைப் பயன்படுத்தியுள்ளனர் என்று ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கும்பலின் டிரான்ஸ்போர்ட்டர் என்று நம்பப்படும் உள்ளூர் நபர் ஒருவரால் வாகனம் ஓட்டப்பட்டது என்றும் , வாகனத்திற்குள் மியன்மாரைச் சேர்ந்த 17 முதல் 25 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்களையும் மூன்று பெண்களும் இருந்ததாகவும், அவர்களிடம் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதால் அவர்களை நாங்கள் தடுத்து வைத்துள்ளோம் என்றும் அவர் இன்று கூறினார்.

“இந்தக் கும்பல் மூலம் ஒழுங்குபடுத்தப்படும் ஒவ்வொரு பயணத்திற்கும் டிரான்ஸ்போர்ட்டருக்கு RM1,000 முதல் RM1,200 வரை வழங்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அடுத்த நடவடிக்கைக்காக கிளந்தான் குடிநுழைவு அமலாக்கப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here